நாளை முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வரும் பொது சார்ஜர் விதிமுறை
செய்தி முன்னோட்டம்
எலெக்ட்ரானிக் குப்பைகளைக் குறைக்கவும், பயனாளர்களின் சிரமத்தைப் போக்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கேட்ஜட்களுக்கும் ஒரே வகையான சார்ஜரை வழங்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பானது 2024 ஜனவரி 1, அதாவது நாளை முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வருகிறது. நாளை முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரானிக் கேட்ஜட்கள் 'டைப்-சி' (Type-C) சார்ஜிங் போர்ட்களை மட்டுமே கொண்டு விற்பனை செய்யப்படவிருக்கின்றன.
உலகம் முழுவதும் தனித்துவமான சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களைக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் கூட, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிவிப்பையடுத்து, தங்களது கேட்ஜட்களில் டைப்-சி சார்ஜிங் போர்ட்களை வழங்கத் தொடங்கிவிட்டது.
ஐரோப்பிய ஒன்றியம்
லேப்டாப்பிலும் டைப்-சி சார்ஜிங் போர்ட்?
தற்போது வரை வெளியாகியிருக்கும் அறிவிப்பின்படி, ஸ்மார்ட்போன், டேப்லட், கேமரா, ஹெட்போன், ஸ்பீக்கர், கேமிங் கன்சோல், இ-புக் ரீடர், இயர்பட்ஸ், கீபோர்டு மற்றும் மவுஸ் என ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் சார்ஜ் செய்யும் வகையிலான அனைத்து கேட்ஜட்களிலும் டைப்-சி சார்ஜிங் போர்ட்டே கொடுக்கப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேட்ஜட்களைக் கடந்து, 2026ம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் லேப்டாப்களிலும் கேட்ஜட்களுக்கான பொதுவான சார்ஜிங் போர்ட்டான டைப்-சி வசதியைக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய கேட்ஜட்களை வாங்கும் வாடிக்கையாளர், அதற்கான சார்ஜருக்கும் தனியாக செலவு செய்ய வேண்டியதில்லை.