ட்விட்டர் பயனர்களை கட்டண சேவைக்கு சந்தா செலுத்த ஊக்குவிக்கும் எலான் மஸ்க்
ட்விட்டரின் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்க பல்வேறு புதிய நடவடிக்கைகளை அத்தளத்தில் எடுத்து வருகிறார் ட்விட்டரின் நிர்வாகத் தலைவரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான எலான் மஸ்க். கடந்த சில மாதங்களில் அவர் மேற்கொண்ட முக்கியமாக நடவடிக்கைகள் அனைத்தும் ட்விட்டர் பயனர்களை அத்தளத்தின் கட்டண சேவையான ட்விட்டர் ப்ளூவுக்கு சந்தா செலுத்த வைப்பதை மையமாகக் கொண்டதே. தற்போது நேரடியாகவே, ட்விட்டப் பயனர்களை சந்தா செலுத்த ஊக்குவிக்கும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார் எலான் மஸ்க். நேற்று அவர் பதிவிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், "பயனர்கள் ட்விட்டர் ப்ளூ கட்டண சேவையில் இணைவதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ட்விட்டரின் விளம்பர வருவாய் பகிர்வுத் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான டாலர்களைச் சம்பாதிக்க முடியும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
ஏன் ட்விட்டர் ப்ளூ சேவைக்கு சந்தா செய்ய வேண்டும்?
மேலும், எலான் மஸ்க் தன்னுடைய பதிவில், "ட்விட்டர் ப்ளூ சேவையில் இணைய இரண்டு நிமிடங்கள் போதும், வெறும் 7 டாலர்கள் (இந்தியாவில் மாதத்திற்கு ரூ.650) செலவழித்தால் போதும்" எனவும் பதிவிட்டிருக்கிறார் அவர். ட்விட்டர் ப்ளூவுக்கு சந்தா செய்த பயனர்கள், குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களைப் பெற்றால் அவர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தது ட்விட்டர். ட்விட்டரின் விளம்பர வருவாய் பகிர்வு திட்டத்தின் கீழ், நமக்கு வருவாய் பகிரப்பட வேண்டும் என்றால், நாம் குறைந்தபட்சம் 10,000 பின்தொடர்பாளர்கைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், மாதம் 5 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றிருக்க வேண்டும். இது அனைத்து பயனர்களுக்கும் சாத்தியமில்லாத நிலையில், எலான் மஸ்க்கின் ட்வீட்டுக்கு பலரும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.