ட்விட்டர் தளத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்
ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளில் பார்க்கும் ட்வீட்களின் அளவில் புதிய வரம்புகளை அறிவித்திருக்கிறது ட்விட்டர் நிறுவனம். இது குறித்த அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான எலான் மஸ்க் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார். இந்த புதிய விதிமுறையின்படி, வெரிஃபை செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளைக் கொண்டவர்கள் ஒரு நாளில் 6,000 ட்வீட்டகளையும், வெரிஃபை செய்யப்படாத ட்விட்டர் கணக்குகளைக் கொண்டவர்கள் 600 ட்வீட்களையும், புதிதாகத் கணக்கைத் தொடங்கிய ட்விட்டர் பயனர்கள் 300 ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறார் எலான் மஸ்க். மேலும், இனி ட்விட்டர் தளத்தில் கணக்கு இருந்தால் மட்டுமே அத்தளத்தில் பதிவிடப்படும் ட்வீட்களை பார்க்க முடியும் என சில நாட்களுக்கு முன் எலான் மஸ்க் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த புதிய விதிமுறைகள்?
பலதரப்பட்ட தலைப்புகளில் மக்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக இருந்து வருகிறது ட்விட்டர். அந்தத் தகவல்களை பிற நிறுவனங்கள் தங்களுடைய தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். ஆனால், தற்போது ட்விட்டர் தளத்தில் இருந்து மிக அதிக அளவில் தகவல் சுரண்டல் நடப்பதாகவும், அதனைத் தடுக்கவுமே இந்த நடவடிக்கை எனவும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். மேலும், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி பிறகு, அத்தளத்தில் செய்யப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால், ட்விட்டரின் விளம்பர வருவாய் மிகவும் குறைந்திருக்கிறது. ட்விட்டரை விட்டுச் சென்ற விளம்பரதாரர்களை மீண்டும் அத்தளத்திற்குக்க கொண்டு வரவும், அந்நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கவும் மேற்கூறிய நடவடிக்கை முதல் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் எலான் மஸக்.