வாட்ஸ்அப்பைப் போலவே வசதிகள்.. ட்விட்டரிலும் அறிமுகம் செய்யும் எலான் மஸ்க்!
ட்விட்டரில் தொடர்ந்து பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கிறார் எலான் மஸ்க். ட்விட்டரில் வாட்ஸ்அப்பைப் போலவே குறுஞ்செய்தி வசதியையும் அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் அவர். வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள் என்கிரிப்ட் செய்ப்பட்டிருக்கும். ட்விட்டரிலும் அதே போல என்கிரிப்ட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி வசதியை நாளை முதல் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடவிருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் எலான் மஸ்க். தற்போது வரை ட்விட்டர் ஒரு மைக்ரேப்ளாகிங் தளமாகவே இருந்து வருகிறது. இதனை கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார் எலான் மஸ்க். மேலும், ட்விட்டரை லாங்-ஃபார்ம் ட்வீட், பேமண்ட், என்கிரிப்பட்ட DM என அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய ஒரு செயலியாக மாற்ற வேண்டும் எனக் கடந்த ஆண்டே தெரிவித்திருந்தார்.
புதிய மாற்றங்கள்:
இது மட்டும் இல்லாமல், ட்விட்டரில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் செய்யும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பாதக தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் எலான் மஸ்க். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பதை போலவே அனைத்து வசதிகளையும் ட்விட்டரிலும் கொண்டு வருவதன் மூலம் அத்தளங்களுக்கான நேரடி போட்டியாளராக மாறுகிறது ட்விட்டர். ட்விட்டரிலேயே கிளப்ஹவுஸ் போல ஸ்பேசஸ் வசதியும் இருப்பது குறிப்பிடத்தக்கது. செயல்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை அத்தளத்தில் இருந்து நீக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தான், இதே போல ஒரு ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். பயனர்களின் ட்விட்டர் கணக்கு நீக்கப்படுவதற்கு முன்பு அதன் உரிமையாளருக்கு தெரிவிக்கப்படும் எனவும், வேண்டும் என்பவர்கள் லாக்இன் செய்து தங்களுடைய ட்விட்டர் கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.