Loading...
எல் நினோ உச்சம்: பசிபிக் பெருங்கடல் வெப்பநிலை முதல்முறையாக 30°C ஆக உயர்வு
பசிபிக் பெருங்கடல் வெப்பநிலை முதல்முறையாக 30°C ஆக உயர்வு

எல் நினோ உச்சம்: பசிபிக் பெருங்கடல் வெப்பநிலை முதல்முறையாக 30°C ஆக உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2026
06:28 pm

செய்தி முன்னோட்டம்

உலகளவில் வானிலை அமைப்புகளை மாற்றியமைக்கும் இயற்கை காலநிலை மாற்ற நிகழ்வான எல் நினோ தற்போது புதிய வேகம் எடுத்துள்ளது. இதன் விளைவாக, நிலநடுக்கோட்டு பசிபிக் பெருங்கடலின் மையப் பகுதியின் மேற்பரப்பு நீர் வெப்பநிலை, இதுவரை பதிவாகிடாத அளவுக்கு அக்டோபர் 22 அன்று 30°C எட்டியுள்ளதாக அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தீவிரம் வரும் மாதங்களிலும் தொடர்ந்து நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முந்தைய சாதனைகள்

முந்தைய சாதனைகளை முறியடிக்கும் எல் நினோ தாக்கம்

உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பசிபிக் பெருங்கடலின் நினோ 3.4 மண்டலத்தில் பதிவாகும் சராசரி வெப்பநிலை வழக்கத்தை விட பெருமளவு அதிகரித்துள்ளது.

ஜூன் மாதத்தில் 1.6°C ஆக இருந்த இந்த மாறுபாடு, ஆகஸ்டில் 2.5°C ஆக உயர்ந்தது.

வரும் அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் இது வழக்கத்தை விட 3.7°C முதல் 3.8°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 2015-16 காலகட்டத்தில் பதிவான 2.6°C என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

பாதிப்புகள்

இந்திய வானிலை மற்றும் பருவமழை மீதான பாதிப்புகள்

வழக்கத்திற்கு மாறாக வெப்பமடையும் பசிபிக் பெருங்கடல் நீரானது, இந்திய பெருங்கடலின் பருவமழை காற்று மற்றும் மழை மேகங்களின் அமைப்பை நேரடியாகப் பாதிக்கிறது.

இந்திய வானிலை மையத்தின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இந்தியாவில் 13% வரை குறைவான மழை பதிவாகியுள்ளது.

அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் தெற்காசியாவில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலையும், தென்னிந்தியாவின் உட்பகுதிகளில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவும் நிலவக்கூடும் என உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.

ADVERTISEMENT

அச்சம்

2027 வரை நீடிக்கும் ஆபத்தும் உலக நாடுகளின் அச்சமும்

எல் நினோவின் இந்த வேகம் 2026 டிசம்பர் மாதத்தில் தனது உச்சகட்ட நிலையை எட்டி, 2027 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை தீவிரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனால் பசிபிக் பெருங்கடலில் புயல்களின் வேகம் அதிகரிப்பதுடன், ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் கடுமையான வறட்சி, தீவிர வெப்ப அலைகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

விஞ்ஞானிகள் மற்றும் காலநிலை வல்லுநர்கள் பசிபிக் பெருங்கடலின் மாற்றங்களைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

ADVERTISEMENT