Loading...
அதிக சூடான பானங்கள் குடிப்பது தொண்டை/உணவுக்குழாய் புற்றுநோயை உண்டாக்குமா?
சூடான பானங்கள் குடிப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை கணிசமாக உயர்த்துகிறது

அதிக சூடான பானங்கள் குடிப்பது தொண்டை/உணவுக்குழாய் புற்றுநோயை உண்டாக்குமா?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2026
03:11 pm

செய்தி முன்னோட்டம்

அதிகமான சூட்டில் டீ, காபி போன்ற பானங்களைக் குடிப்பது, உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை கணிசமாக உயர்த்துகிறது என்று பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சுமார் 9.8 லட்சம் பேரிடம் 14 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட ஆய்வில், அவர்களின் பானங்கள் அருந்தும் பழக்கவழக்கங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. 'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சர்' இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பானங்களின் வெப்பநிலையும், அவை அருந்தப்படும் இடைவெளியும் புற்றுநோய் பாதிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது.

அபாயம்

மூன்று மடங்கு அதிகரிக்கும் அபாயம்

மிதமான சூட்டிற்கு பதிலாக 'மிக அதிகச் சூட்டில்' பானங்களை அருந்துபவர்களுக்கு, 'உணவுக்குழாய் செதில் உயிரணு புற்றுநோய்' (SCC) ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகமாக உள்ளது.

தினமும் 6 அல்லது அதற்கு மேற்பட்ட முறை அதிக சூடான பானங்களை அருந்துபவர்களுக்கு இந்த ஆபத்து 71% வரை அதிகரிக்கிறது.

இருப்பினும், இந்த வெப்பநிலை பாதிப்பு 'அடீனோகார்சினோமா' (AC) என்ற மற்றொரு வகை உணவுக்குழாய் புற்றுநோயை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்புமுறை

உலகளாவிய எச்சரிக்கையும் தடுப்புமுறைகளும்

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளைப்போலவே, 70 டிகிரி செல்சியஸிற்கு மேல் சூடான பானங்களை அருந்துவது புற்றுநோய்க்கான காரணியாக அமைகிறது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை (IARC) ஏற்கனவே அதிகச் சூடான பானங்களை 'புற்றுநோயை உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறு கொண்டவை' என வகைப்படுத்தியுள்ளது.

மக்கள் தங்களது பானங்களை சற்று ஆறவைத்து மிதமான சூட்டில் அருந்துவதன் மூலம் ஏழில் ஒரு உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பைத் தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT