Page Loader
அனைத்து வங்கி பயனர்களும் பயன்படுத்தும், SBI-இன் புதிய யுபிஐ கட்டண சேவை செயலி
SBI வங்கியின் புதிய யுபிஐ கட்டண சேவை செயலி, பிற செயலிகளுக்குப் போட்டியா

அனைத்து வங்கி பயனர்களும் பயன்படுத்தும், SBI-இன் புதிய யுபிஐ கட்டண சேவை செயலி

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 17, 2023
04:13 pm

செய்தி முன்னோட்டம்

எஸ்பிஐ வங்கியானது, தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மொபைலில் வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக 2017-ல் 'யோனோ எஸ்பிஐ' (YONO SBI) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது. அந்தச் செயலியை இந்த மாதத் தொடக்கத்தில் மறுவடிவமைப்பு செய்து அனைத்து வங்கி பயனர்களும் பயன்படுத்தும் வகையிலான யுபிஐ கட்டண சேவைச் செயலியாக வெளியிட்டது எஸ்பிஐ வங்கி. இந்தியாவில் யுபிஐ கட்டண சேவையை வழங்கி வரும் பிற செயலிகளுக்குப் போட்டியாக தங்களுடைய இந்த மேம்படுத்தப்பட்ட செயலியை அறிமுகம் செய்திருக்கிறது எஸ்பிஐ. எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய யுபிஐ செயலி அறிமுகமானது, தொழில்நுட்ப நிறுவனங்களின் யுபிஐ செயலிகளின் மீது நம்பிக்கை இல்லாத பிற வாடிக்கையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பிஐ

பிற யுபிஐ கட்டண சேவை செயலிகளுக்குப் போட்டியாக அமையுமா? 

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், இதனை தங்களுடைய வங்கிச் சேவைகளை செயல்படுத்துவதற்கான செயலியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிற வங்கி வாடிக்கையாளர்கள், இதனை ஒரு யுபிஐ கட்டண சேவை செயலியாக மட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த புதிய யுபிஐ செயலியானது, ஏற்கனவே சந்தையில் இருக்கும் பிற செயலிகளுக்கான போட்டியாக இருக்காது என சில சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ கட்டண சேவை வழங்கும் செயலிகள், அது மட்டுமல்லாது பிற கட்டணங்களை மேற்கொள்வதற்கான வசதிகளையும் வழங்கி வருகின்றன. ஆனால், இந்த எஸ்பிஐ செயலியில் அப்படியான வசதிகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், இந்த புதிய செயலி யுபிஐ-யின் மேல் நம்பிக்கையில்லாத வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற உதவும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.