பேச்சுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கருவி
அறிவியலின்படி மனிதர்களாகிய நாம் பேசுவதற்கு நமது வாயைப் பயன்படுத்துகிறோம். வாய்ப் பகுதியில் இருக்கும் தசைகளை அசைத்து காற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒலியை உருவாக்கி அதனைக் கொண்டு பேசுகிறோம். நாம் வாயையே திறக்காமல் கணினியுடனும், பிற மனிதர்களுடனும் பேச முடிந்தால்? அப்படியான ஒரு மின்னணு சாதனத்தையே வடிவமைத்திருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த அர்னவ் கபூர். தன்னுடைய இந்த புதிய கண்டுபிடிப்புக்கு 'ஆல்டர் ஈகோ' எனப் பெயரிட்டிருக்கிறார் அவர். நாம் பேச நினைக்கும் வார்த்தைகள் மூலையில் உதயமாகி பின்னர் சமிஞ்ஞைகளாக நரம்புகள் வழியே வாய் பகுதியில் இருக்கும் தசைக்கு அனுப்பப்படும். இந்த சமிஞ்ஞைகளை இடைமறித்துக் கண்டறிந்து, அவற்றை கணினிக்கு அனுப்பும் வேலையையே அர்னவ்வின் ஆல்டர் ஈகோ மேற்கொள்ளும்.
வேறு என்ன செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது இந்தப் புதிய கருவி?
நாம் பேச நினைப்பதை கணினிக்கு அனுப்புவது மட்டுமில்லாமல், நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை இணையத்தில் தேடி, அதனையும் தன்னிடம் இருக்கும் வைப்ரேட்டர்கள் மூலம் பயனாளருக்குத் தெரிவிக்கும் திறனைக் கொண்சடிருக்கிறது அர்னவ்வின் இந்தப் புதிய மின்னணு சாதனம். இந்தப் புதிய சாதனத்தை பேச்சுத் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்துவதற்காகவே உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அர்னவ் கபூர். அமெரிக்காவின் மாசசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அர்னவ், 2018-லேயே இந்த சாதனத்தின் முன்மாதிரியை வடிவமைத்திருக்கிறார். மேலும், டைம்ஸ் பத்திரிகையின் 2020-ம் ஆண்டின் 100 சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறார் இவர்.