அரசு அங்கீகாரம் பெற்ற Truecaller போன்ற செயலி CNAP; இது எவ்வாறு செயல்படும்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடி அழைப்புகளின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) ஒரு முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதுதான் CNAP(Calling Name Presentation) சேவை. இந்த புதிய அமைப்பு, 'Truecaller' போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை நம்பாமல், அழைப்பவரின் சரிபார்க்கப்பட்ட (Verified) பெயரை உங்கள் தொலைபேசி திரையில் நேரடியாகக் காண்பிக்கும். CNAP, ஒருவருக்கு அழைப்பு வரும்போது, அந்த எண்ணுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட உரிமையாளரின் பெயரை திரையில் காட்டும். CNAP-இன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது KYC பதிவுகளின் அடிப்படையில் செயல்படும். அதாவது, நீங்கள் சிம் கார்டு வாங்கும்போது வழங்கிய, அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட உங்கள் உண்மையான பெயரே காண்பிக்கப்படும்.
நம்பகத்தன்மை
இதன் நம்பகத்தன்மை சமரசமற்றது
Truecaller போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள், பயனர்கள் அளிக்கும் தகவல் (Crowd-sourced data) அல்லது சமூக வலைதள தரவுகளை நம்பி பெயரை காண்பிக்கின்றன. இதனால், சில சமயம் பெயர்கள் தவறாகவோ அல்லது ஸ்பேம் என தவறாகவோ அடையாளம் காணப்படலாம். ஆனால், CNAP என்பது டெலிகாம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தரவுதளத்தில் இருந்து நேரடியாகப் பெறப்படுவதால், அதன் நம்பகத்தன்மை மிக அதிகம். இந்த CNAP சேவை அனைத்து சந்தாதாரர்களுக்கும் இயல்பாகவே (By Default) செயல்படுத்தப்படும். தேவை இல்லை என்றால், சந்தாதாரர்கள் தங்கள் சேவை வழங்குநரைத் தொடர்புகொண்டு இதை நிறுத்திக்கொள்ளலாம்.
வணிகம்
வணிக அழைப்புகளுக்கு என்ன விதி?
தனிநபர்களைத் தாக்கும் மோசடி அழைப்புகள், ஸ்பூஃபிங் (Spoofing) மூலம் போலியான எண்களைப் பயன்படுத்தும் நபர்கள் மற்றும் தேவையற்ற விளம்பர அழைப்புகள் (UCC) ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த இந்த நடவடிக்கை உதவுகிறது. மொத்த இணைப்புகள் (Bulk Connections) அல்லது வணிக பயன்பாட்டிற்கான எண்களை வைத்திருக்கும் நிறுவனங்கள், தங்கள் 'விருப்பமான பெயரை' காண்பிக்கக் கோரலாம். இந்த பெயர் பொதுவாக, நிறுவனத்தின் வர்த்தக முத்திரை (Trademark Name) அல்லது GST பதிவேட்டில் உள்ள பெயராக இருக்கும். இதுவும் அரசு ஆவணங்களுடன் சரிபார்க்கப்படும்.
நடைமுறை
எப்போது நடைமுறைக்கு வரும்?
TRAI இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, தொலைத்தொடர்பு துறைக்கு (DoT) தனது பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. தற்போது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த வசதியை 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளில் சில பகுதிகளில் சோதனை செய்து வருகின்றன. அனைத்து கட்டமைப்பு மாற்றங்களும் முடிந்த பிறகு, இது நாடு முழுவதும் rollout செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம், ஒவ்வொரு அழைப்பை பற்றியும் அறிந்த பின்னரே பதிலளிக்கும் முடிவை பயனர்கள் எடுக்க முடியும் என TRAI நம்புகிறது.