பெட்ரோல் போட இனி கவலை இல்லை! காற்றிலிருந்தே பெட்ரோல் தயாரிக்கும் சீனா
செய்தி முன்னோட்டம்
ஈரானுக்கு எதிரான போர் மற்றும் பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் உலகளாவிய எரிபொருள் சந்தை கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், சீனா தனது எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய மாற்றுகளைக் கண்டறிந்துள்ளது. ஷாங்காயை தளமாக கொண்ட 'கார்பனாலஜி' என்ற நிறுவனம், காற்றிலிருந்து எரிபொருளை தயாரிக்கும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனா தனது கச்சா எண்ணெய் தேவையில் 70 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதியையே நம்பியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் எண்ணெய் விநியோகம் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டிலேயே எரிபொருள் தயாரிக்கும் இத்தகைய 'Direct Air Capture' தொழில்நுட்பங்களில் சீனா பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது.
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம் எப்படிச் செயல்படுகிறது?
காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை (CO2) அதிநவீன இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுத்து, அதனுடன் நீரைச் சேர்த்து வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்துகின்றனர். இந்தச் செயல்முறைக்குத் தேவையான மின்சாரம் முழுமையாக சூரிய மற்றும் காற்று ஆற்றல் மூலம் பெறப்படுகிறது. இத்தொழில்முறை மூலம் செயற்கை பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் நாப்தா ஆகியவற்றைத் தயாரிக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாகச் செயற்கை எரிபொருட்கள் தயாரிப்பதற்கு அதிகச் செலவாகும் (ஒரு கேலன் சுமார் 14 டாலர்). ஆனால், டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஒருவரால் தொடங்கப்பட்ட இந்த 'கார்பனாலஜி' நிறுவனம், சந்தையில் விற்கப்படும் சாதாரண பெட்ரோல் விலைக்கு இணையாக செயற்கை எரிபொருளைத் தயாரிக்கும் செலவைக் குறைத்துள்ளதாகக் உரிமை கோரியுள்ளது.