
சோடியம் அயன் பேட்டரி ஆற்றல் சேமிப்பு நிலையத்தை தொடங்கியது சீனா
செய்தி முன்னோட்டம்
சீனா தனது முதல் பெரிய அளவிலான சோடியம்-அயன் பேட்டரி ஆற்றல் சேமிப்பு நிலையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தூய்மையான ஆற்றல் துறையில் சீனா எட்டி இருக்கும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
இந்த நிலையம் தெற்கு சீனாவில் உள்ள குவாங்சி தன்னாட்சிப் பகுதியின் நானிங்-இல் அமைந்துள்ளது.
இந்த சேமிப்பு நிலையத்தில் உருவாகும் ஆற்றல் லித்தியம் பேட்டரிகளுக்கு சாத்தியமான மாற்றாக இருக்கும்.
சைனா சதர்ன் பவர் கிரிட்டின் கூற்றுப்படி, இந்த சேமிப்பு நிலையத்தின் ஆரம்ப சேமிப்பு திறன் 10MWh ஆகும்.
இந்த திட்டம் முழுவதும் முடிந்ததும் இதன் சேமிப்பு திறன் 100MWh ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா
தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நோக்கி நகரும் சீனா
இந்த திட்டம் முழுமையாக உருவாக்கப்பட்ட பிறகு, இது ஆண்டுதோறும் 73,000MWh புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கும். இது 35,000 குடும்பங்களின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாகும்.
இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை 50,000 டன்கள் குறைக்கும் என்று சீன அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற தூய்மையான ஆற்றல் ஆதாரங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் போது ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் முக்கியமானவையாகும்.
இந்த அமைப்புகள் பவர் கிரிட்களின் நெகிழ்வுத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விரிவாக்கத்தை எளிதாக்குகிறது.