வாட்ச்மேன் போல கணக்கைக் கவனிக்கும் ஏஐ! சாட்ஜிபிடியில் இணைக்கப்பட்ட பேடிஎம் & பஜாஜ் புரோக்கிங்; பயனர்களுக்கு என்ன பயன்?
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவுத் தளமான சாட்ஜிபிடி, வெறும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், நிதிச் சேவைகளுக்கான தகவல் மையமாகவும் உருவெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முன்னணி வர்த்தகத் தளங்களான பேடிஎம் பேமெண்ட் கேட்வே மற்றும் பஜாஜ் புரோக்கிங் ஆகிய இரண்டும் சாட்கிபிடியுடன் தங்களது சேவைகளை இணைப்பதாக அறிவித்துள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
வசதிகள்
வணிகர்களுக்குப் பேடிஎம் இணைப்பு வழங்கும் வசதிகள்
பேடிஎம் பேமெண்ட் கேட்வே பயன்படுத்தும் வணிகர்கள், தங்களது கணக்கை சாட்கிபிடியுடன் பாதுகாப்பாக இணைத்துக் கொள்ளலாம்.
இதன் மூலம் தினசரி விற்பனை விவரங்கள், வாடிக்கையாளர்களுக்கான ரீஃபண்ட் நிலவரங்கள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பேமெண்ட் லிங்க் நிலவரங்களை சாட்ஜிபிடியிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்.
இது மாடல் காண்டெக்ஸ்ட் புரோட்டோகால் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
நன்மைகள்
முதலீட்டாளர்களுக்குப் பஜாஜ் புரோக்கிங் பிளகின் தரும் நன்மைகள்
பஜாஜ் புரோக்கிங் வாடிக்கையாளர்கள் தங்களது டிமேட் மற்றும் டிரேடிங் கணக்கை சாட்ஜிபிடி பிளகின் மூலம் இணைக்க முடியும்.
இதன் மூலம் தங்களின் போர்ட்ஃபோலியோ நிலவரம், பங்குகளின் தற்போதைய சந்தை விலை, நிலுவையில் உள்ள ஆர்டர்கள், கணக்கில் உள்ள தொகை மற்றும் லாப-நஷ்டப் பட்டியலை சாட்ஜிபிடியிடம் உரையாடுவதன் மூலம் நொடியில் பெற முடியும்.
பாதுகாப்புக் கட்டுப்பாடுகள்
பணப்பரிவர்த்தனை செய்ய முடியுமா?
இந்த இரண்டு இணைப்புகளுமே படிப்பதற்கு மட்டுமே (Read-Only Access) அனுமதி அளிக்கப்பட்டவை ஆகும்.
அதாவது:
செய்யக்கூடியவை: கணக்கில் உள்ள தகவல்கள், அறிக்கைகள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கேட்டுப் பெறலாம்.
செய்ய முடியாதவை: சாட்கிபிடி மூலம் நேரடியாகப் பணப்பரிவர்த்தனை செய்யவோ, ரீஃபண்ட் அனுப்பவோ, பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது.
அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் வழக்கம் போலப் பேடிஎம் மற்றும் பஜாஜ் புரோக்கிங் தளங்களின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு நடைமுறைகள் மூலமாகவே நடைபெறும். பயனர்களின் முன் அனுமதி இன்றி சாட்ஜிபிடியால் கணக்குத் தரவுகளை அணுக முடியாது.