சாட்ஜிபிடி இயங்க கட்டுப்பாடுகளை விதித்த இத்தாலி!
கடந்த மாதம் இத்தாலியின் தகவல் பாதுகாப்பு அமைப்பான கராண்டே, இத்தாலியில் ஓபன்ஏஐ-யின் சாட்ஜிபிடி இயங்குவதற்குத் தடை விதித்தது. தகவல் கையாளுதலில், தனியுரிமை கொள்கைகள் மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்து அது தொடர்பாக ஓப்பன்ஏஐ நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது அந்த அமைப்பு. சாட்ஜிபிடி இத்தாலியில் மீண்டும் இயங்க வேண்டும் என்றால், தாங்களுடைய கோரிக்கைகளை ஓப்பன்ஏஐ நிறுவனம் வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது இத்தாலியின் தகவல் பாதுகாப்பு நிறுவனம். அந்த அமைப்பின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறது, செயற்கை நுண்ணறிவு மாடலான சாட்ஜிபிடி-யை உருவாக்கிய ஓப்பன்ஏஐ நிறுவனம்.
என்னென்ன கோரிக்கைகள்?
தங்கள் நாட்டு பயனர்களின் தகவல்களை எந்த வகையில் அந்நிறுவனம் பயன்படுத்துகிறது என்பதை பயனர்களிடம் தெளிவாக விளக்க வேண்டும். பயனர்கள் வழங்கும் தகவல்களை தங்களுடைய பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாமா வேண்டாமா என்னும் தேர்வை பயனர்களிடமே கேட்க வேண்டும். பயனர்கள் விரும்பவில்லை என்றால் அவர்களின் தகவலை பயன்படுத்தக் கூடாது. 13 வயதுக்குட்பட்வர்கள் சாட்ஜிபிடி-யை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் தடுப்பு முறைகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது இத்தாலியின் தகவல் பாதுகாப்பு அமைப்பு. மேலும், தற்போது விசாரணை நடைபெற்று வருவதால், இதன் பிறகும் தேவைப்படும் விதிமுறைகள் விதிக்கப்படும் எனவும் அறுவுறுத்தியிருக்கிறது அந்த அமைப்பு.