டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்: திரைப்படங்கள் மற்றும் ஓடிடி திருட்டு கன்டென்ட்களுக்கு 15 நாட்களில் தடை
செய்தி முன்னோட்டம்
டெலிகிராம் செயலியில் சட்டவிரோதமாகப் பகிரப்படும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி கன்டென்ட்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 4) நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த ஆன்லைன் பைரசி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை இன்னும் 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம், திரைப்படத் துறை, ஒளிபரப்பாளர்கள், ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பைரசி சேனல்கள்
3,142 பைரசி சேனல்களைக் கண்டறிந்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
பல்வேறு ஓடிடி தளங்கள் மற்றும் உள்ளடக்க உரிமையாளர்களிடமிருந்து வந்த தொடர் புகார்களைத் தொடர்ந்து, காப்புரிமை பெற்ற திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் டெலிகிராமில் அனுமதியின்றிப் பகிரப்படுவது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து விரிவான விசாரணை நடத்திய மத்திய அமைச்சகம், சட்டவிரோத உள்ளடக்கங்களை விநியோகிக்கும் 3,142 டெலிகிராம் சேனல்களைத் தற்பொழுது அடையாளப்படுத்தியுள்ளது. வெறும் சேனல்களை மட்டும் முடக்குவதோடு நிறுத்தாமல், இந்தத் திருட்டுத் தனத்தில் தொடர்ந்து ஈடுபடும் சேனல்கள், குழுக்கள், பாட்கள், கணக்குகள், அட்மின்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல்
வெறும் நீக்கங்கள் அல்லாமல் பிளாட்பார்ம் பொறுப்புக்கூறல் முறைக்கு மாற்றம்
மத்திய அரசின் இந்தத் தகவல் தொடர்பு என்பது வெறும் தனித்தனி சேனல்களை மட்டும் நீக்கும் பழைய முறையிலிருந்து மாறி, ஒட்டுமொத்த தளத்தின் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் புதிய உத்தியாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக மத்திய அரசு 3000 க்கும் மேற்பட்ட டெலிகிராம் பைரசி சேனல்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் ஐடி விதிகள் 2021 இன் கீழ் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸில், ஒவ்வொரு பைரசி சேனலையும் அரசு அடையாளம் காட்டும் வரை டெலிகிராம் வெறுமனே காத்திருக்கக் கூடாது என்றும், ஒரு இடைத்தரகராக உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
நீட் தேர்வுத்தாள்
நீட் தேர்வுத்தாள் கசிவு மற்றும் தொடரும் டெலிகிராம் அச்சுறுத்தல்கள்
கடந்த சில மாதங்களாகவே மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் உணர்வுப்பூர்வமான உள்ளடக்கப் பகிர்வு போன்ற பல்வேறு புகார்களால் டெலிகிராம் செயலி இந்தியாவில் தீவிரக் கண்காணிப்பில் உள்ளது. குறிப்பாக, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் கசிந்த போலி வினாத்தாள்கள் பரவுவதைத் தடுக்கத் தவறியதால், கடந்த ஜூன் 22 வரை டெலிகிராம் மற்றும் அதன் இணையச் சேவைகளுக்கு மத்திய அரசு ஒரு வாரம் தடை விதித்திருந்தது. அந்த தடைக்காலம் முடிந்து டெலிகிராம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், தற்பொழுது இந்த சினிமா பைரசி விவகாரத்தில் சிக்கியுள்ளதால் 15 நாட்களுக்குள் டெலிகிராம் அளிக்கப்போகும் பதில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.