புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு - மத்திய அரசு
புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளில் சாதனைப்படைப்போர் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்னாகர், விஞ்ஞான் டீம் உள்ளிட்ட விருதுகள் 4 பிரிவுகளில் வழங்கப்படும். மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் தலைமையிலான குழு இந்த புதிய விருதுகளை வழங்க 13 அறிவியல் துறையினை சார்ந்த விஞ்ஞானிகளை தேர்வுச்செய்வர் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, விஞ்ஞானத்துறையில் சிறந்த பங்களிப்பினை வழங்கியவர்களுக்கு 'விஞ்ஞான் ஸ்ரீ'விருதும், இத்துறையில் வாழ்நாள் சாதனைப்படைத்தவர்களுக்கு 'விஞ்ஞான் ரத்னா'விருதும் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்துறைகளில் சிறந்து விளங்கும் 45வயதுடைய இளம் விஞ்ஞானிகளுக்கு 'விஞ்ஞான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்னாகர்'விருதுகள் வழங்கப்படுமாம்.
தேசிய விண்வெளி தினமான ஆகஸ்ட் 23ம் தேதி விருதுகள் விநியோகிக்கப்படும்
மேலும், 3 பேருக்கு மேலான விஞ்ஞானிகள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழுவாக சிறப்பாக செயல்படுவோருக்கு,'விஞ்ஞான் டீம்'விருது அளிக்கப்படுமாம். அதேபோல் தொழில்நுட்ப நிபுணர்கள், அரசு-தனியார் மற்றும் மற்ற அமைப்புகளில் தனியாக பணியாற்றும் விஞ்ஞானிகள், புதுமையான கண்டுபிடிப்புகளில் சிறந்த பங்களிப்பினை அளித்தவர்கள் ஆகியோர் இந்தியாவின் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் துறையின் உயரிய விருதான 'தி ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார்'விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விருதுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம்தேதி முதல் பிப்ரவரி 28ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தேசிய தொழில்நுட்ப தினமான மே 11ம்தேதி அறிவிக்கப்படும். பின்னர் தேசிய விண்வெளி தினமான ஆகஸ்ட் 23ம் தேதி விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.