BSNL அறிமுகம் செய்த சாட்டிலைட் போன்: மொபைல் டவர் இல்லாவிட்டாலும் பேசலாம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்(BSNL), மொபைல் டவர்கள் மற்றும் நெட்வொர்க் சிக்னல் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களும் தடையின்றி தொடர்புகொள்வதற்காக புதிய சாட்டிலைட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வரிகள் உட்பட இந்த அதிநவீன சாட்டிலைட் போனின் விலை ₹1,34,166 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாம் வழக்கமாக பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் அருகில் இருக்கும் மொபைல் டவர்கள் மூலம் செயல்படும், ஆனால் இந்த சாதனம் நேரடியாக விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களுடன் இணைந்து செயல்படக் கூடியது.
செயல்பாடு
BSNL சாட்டிலைட் போன் எவ்வாறு செயல்படுகிறது?
சாதாரண மொபைல் போன்களுக்கு சிக்னல் கிடைக்காத ஆஃப்-கிரிட் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகள், உயரமான மலை உச்சி போன்ற இடங்களிலும் கூட, இது நேரடியாக செயற்கைக்கோளுடன் இணைப்பை ஏற்படுத்துவதால் எவ்வித நெட்வொர்க் தடையுமின்றி வாய்ஸ் கால் பேச முடியும். இதற்காக BSNL நிறுவனம் சர்வதேச செயற்கைக்கோள் நெட்வொர்க் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான 'Inmarsat' உடன் கூட்டு சேர்ந்து இந்த சேவையை வழங்குகிறது. இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில் மீட்புப் பணிகளுக்கு இந்த போன் ஒரு வரப்பிரசாதமாகும்.
அம்சங்கள்
முக்கிய அம்சங்கள்
மொபைல் டவர் இல்லாத மிகத் தொலைதூரப் பகுதிகளிலும் தடையற்ற சிக்னல். மிகத் தெளிவான ஆடியோ தரத்துடன் குரல் வழி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி. ஆபத்தான அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளும்போது உடனடியாகத் தகவல் அனுப்பப் பிரத்யேக SOS பட்டன். மின்சார வசதி இல்லாத காடுகளில் பல நாட்கள் பயன்படுத்தும் வகையில் நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி. நீர், தூசி மற்றும் கடுமையான தட்பவெப்ப நிலைகளைத் தாங்கிப் பணிபுரியும் வகையில் மிகவும் வலுவாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
விதிகள்
யார் இந்த போனை வாங்கலாம்?
இந்தச் சாட்டிலைட் போனை சாதாரண ஸ்மார்ட்போன்கள் போல பொதுமக்கள் யாரும் கடைகளுக்குச் சென்று நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ எளிதாக வாங்கிவிட முடியாது. இந்தியாவில் சாட்டிலைட் போன்கள் பயன்படுத்த பாதுகாப்பு காரணங்களுக்காக கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இதைப் பெற விரும்பும் தனிநபரோ அல்லது அமைப்போ, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து முறையான முன் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். உரிய அனுமதியின்றி சாட்டிலைட் போன்களை வைத்திருப்பது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இது, ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினர், கடல்சார் வணிகம் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பிரிவினர், பேரிடர் மீட்புக் குழுவினர், சுரங்கத் தொழில் மற்றும் தொலைதூரத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், நெட்வொர்க் இல்லாத மலைப் பிரதேசம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் போன்றவர்களுக்கு பயன்படும்.
விற்பனை
வாங்குவது எப்படி?
இந்தச் சாட்டிலைட் போன் மற்றும் அதன் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அறியவும், அதை வாங்குவதற்கான நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளவும் பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள BSNL அலுவலகத்தை நேரடியாக அணுகலாம் அல்லது BSNL-இன் பிரத்யேக உதவி எண்ணான 9768866652 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். ஒருபுறம் சாட்டிலைட் போன்களை அறிமுகம் செய்துள்ள அதே வேளையில், பிஎஸ்என்எல் தனது வழக்கமான மொபைல் நெட்வொர்க்கையும் நாடு முழுவதும் அதிவேகமாக விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 99,000 4G மொபைல் டவர் தளங்களை (4G Sites) BSNL வெற்றிகரமாக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.