
நெட்வொர்க் சிக்னல் இல்லாத பகுதிகளுக்காக இலவச VoWiFi சேவையை அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல்
செய்தி முன்னோட்டம்
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), தனது புதிய வாய்ஸ் ஓவர் வைஃபை (VoWiFi) அழைப்புச் சேவையை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்தியுள்ளது. இந்தச் சேவை பயனர்கள் தங்கள் மொபைல் செல்லுலார் நெட்வொர்க்கைத் தவிர்த்து, எந்தவொரு நிலையான வைஃபை அல்லது ஹோம் பிராட்பேண்ட் இணைப்பு மூலமாகவும் தெளிவான குரல் அழைப்புகளை மேற்கொள்ளவும் பெறவும் உதவுகிறது. இது குறைந்த சமிக்ஞை அல்லது உள் வளாக நெட்வொர்க் பிரச்சனை உள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிஎஸ்என்எல்லின் 25வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 2ஆம் தேதி தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் இந்தச் சேவையை அறிமுகப்படுத்தினார்.
கட்டுப்பாடுகள்
ஆரம்பத்தில் இரண்டு மண்டலங்களில் மட்டும் சேவை கிடைக்கும்
ஆரம்பத்தில் இந்த VoWiFi அம்சம் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் உள்ள வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் டவர்களை நிறுவிய அதன் சமீபத்திய 4ஜி சேவையைப் போலவே, இந்தச் சேவையையும் விரைவாக விரிவுபடுத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் VoWiFi சேவையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது அனைத்துப் பயனர்களுக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. வைஃபை மூலம் அழைப்புகளைச் செய்வதற்கு எந்தக் கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கு மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. VoWiFi சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம், பல ஆண்டுகளாக இந்த அம்சத்தை வழங்கி வரும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனளுடன் பிஎஸ்என்எல் இணைந்துள்ளது.