LOADING...
Booking.com தரவு கசிவு: பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு - சைபர் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?
Booking.com இணையதளத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள்

Booking.com தரவு கசிவு: பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு - சைபர் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 14, 2026
01:23 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல ஆன்லைன் பயண முன்பதிவு தளமான Booking.com, தனது தளத்தில் ஒரு சைபர் பாதுகாப்பு ஊடுருவல் நிகழ்ந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவி வந்த யூகங்களுக்கு பிறகு, தற்போதைய நிலவரப்படி ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்திருந்தாலும், பயனர்களின் முக்கியத் தரவுகள் கசிந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆன்லைனில் தங்குமிடங்களை முன்பதிவு செய்யும் பழக்கம் கொண்ட ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் இதில் உள்ளன.

பாதிப்பு

பாதிக்கப்பட்ட தரவுகள் என்னென்ன?

ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், முன்பதிவு தொடர்பான விவரங்கள் மட்டுமே வெளி நபர்களால் அணுகப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதில் பயனர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இடங்கள் குறித்த விவரங்கள் அடங்கும். பயனர்களின் கடவுச்சொற்கள் (Passwords) திருடப்படவில்லை என்று நிறுவனம் உறுதியளித்துள்ள போதிலும், திருடப்பட்ட விவரங்களை கொண்டு மர்ம நபர்கள் தேவையற்ற தொந்தரவுகளைச் செய்ய வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பயனர்களின் முன்பதிவு PIN எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மோசடி

நவீன முறையில் அரங்கேறும் ஃபிஷிங் மோசடிகள்

இந்தத் தரவு கசிவை தொடர்ந்து, சில பயனர்களுக்கு ஹோட்டல் ஊழியர்கள் போல வேடமிட்டு மர்ம நபர்களிடமிருந்து போலியான குறுஞ்செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. பயனர்களின் உண்மையான முன்பதிவு விவரங்களை குறிப்பிட்டு இந்தத் தகவல்கள் அனுப்பப்படுவதால், பயணிகளால் இதனை எளிதில் கண்டறிய முடிவதில்லை. இத்தகைய செய்திகளில் உள்ள சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் பயனர்களின் வங்கி விவரங்களைத் திருடும் 'ஃபிஷிங்' (Phishing) வகை மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

Advertisement

பாதுகாப்பு நடவடிக்கை

பயனர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

வங்கி விவரங்கள் திருடப்பட்டதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் இல்லை என்றாலும், அடுத்த சில நாட்களுக்கு உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது அவசியம். முன்பதிவு தளம் தொடர்பாக வரும் தேவையற்ற மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நேரடியாக Booking.com அதிகாரப்பூர்வ செயலி அல்லது இணையதளத்திற்குச் சென்று உள்நுழைந்து சரிபார்ப்பதே பாதுகாப்பான வழியாகும். தற்போதைய சூழலில், உங்கள் Booking.com கணக்கின் கடவுச்சொல்லை உடனடியாக மாற்றுவது மிகச் சிறந்தது. அதேபோல், உங்கள் கணக்கில் உள்ள முன்பதிவு விவரங்கள் மற்றும் பின் (PIN) எண்ணை ஒருமுறை அப்டேட் செய்து கொள்வது உங்களுக்கு மனநிம்மதியை அளிக்கும்.

Advertisement