உங்க குரோம் பிரவுசர் லேக் ஆகுதா? பிரவுசிங் வேகத்தை அதிகரிக்க ரகசிய செட்டிங்ஸ்; இந்த 5 ட்ரிக்ஸ் செஞ்சு பாருங்க
செய்தி முன்னோட்டம்
கூகுள் குரோம் பிரவுசரில் அனைவருக்கும் தெரியாத சில ரகசிய சோதனைக் கட்டங்கள் உள்ளன. இவை குரோம் ஃபிளாக்ஸ் (Chrome Flags) என்று அழைக்கப்படுகின்றன. கூகுள் நிறுவனம் ஒரு புதிய வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் முன், அதனைப் பயனர்கள் சோதனை செய்து பார்க்க இந்தத் தளத்தை வழங்குகிறது. இவற்றை சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் பிரவுசரின் வேகம் மற்றும் செயல்திறனைப் பல மடங்கு அதிகரிக்க முடியும்.
குரோம் ஃபிளாக்ஸ்
குரோம் ஃபிளாக்ஸை ஆன் செய்வது எப்படி?
உங்கள் கூகுள் குரோம் பிரவுசரைத் திறந்து, வலைதள முகவரிப் பட்டியில் (Address Bar) chrome://flags என டைப் செய்து என்டர் அழுத்தவும். மேலே உள்ள தேடல் பெட்டியில் (Search Bar) கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் உங்களுக்குத் தேவையான ஃபிளாக் பெயரைக் கொடுக்கவும். அதன் பக்கத்தில் உள்ள 'Default' என்பதை மாற்றி 'Enabled' எனக் கொடுக்கவும். கீழே தோன்றும் 'Relaunch' பட்டனை அழுத்தினால் பிரவுசர் ரீஸ்டார்ட் ஆகி, புதிய மாற்றம் அமலுக்கு வரும்.
ஃபிளாக்ஸ்
வேகத்தை அதிகரிக்க உதவும் ஃபிளாக்ஸ்
சாதாரணமாக ஒரு கோப்பை டவுன்லோட் செய்யும்போது அது ஒரு வரிசையாகத் தான் டவுன்லோட் ஆகும். ஆனால் `#enable-parallel-downloading` வசதியை ஆன் செய்தால், குரோம் ஒரு கோப்பை பல சிறிய பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்யும். இது பெரிய கோப்புகளை மிக விரைவாகப் பதிவிறக்க உதவும். இணையதளப் பக்கங்களில் உள்ள படங்களைச் செயலாக்கும் பணியை சாதாரணமாக உங்கள் கணினியின் சிபியூ (CPU) கவனிக்கும். `#enable-gpu-rasterization` என்ற ஃபிளாக்கை ஆன் செய்யும்போது, அந்தப் பொறுப்பு கிராபிக்ஸ் கார்டுக்கு (GPU) மாற்றப்படும். இதனால் இணையதளங்களை ஸ்க்ரோல் செய்யும்போது மிகவும் மென்மையாகவும், வேகமாகவும் இருக்கும்.
ஃபிளாக்ஸ்
நினைவகம்
`#enable-zero-copy` என்ற ஃபிளாக், பிரேம்களைத் திரையில் காட்டும்போது மெமரியின் பயன்பாட்டைக் குறைக்கிறது. குறைந்த ரேம் கொண்ட லேப்டாப் அல்லது மொபைல்களில் பிரவுசர் ஹேங் ஆகாமல் இருக்க இந்த வசதி பெரிதும் உதவும். நீங்கள் ஒரு பக்கத்தைப் பார்த்துவிட்டு பின்னோக்கி செல்லும்போது அல்லது முன்னோக்கி செல்லும்போது, அந்தப் பக்கம் மீண்டும் லோடு ஆகாமல் உங்கள் மெமரியில் இருந்து உடனடியாகத் தோன்றும். இந்த சமயங்களில் `#back-forward-cache` ஃபிளாக் பிரவுசிங் நேரத்தைப் பெருமளவு மிச்சப்படுத்தும். கூகுள் உருவாக்கிய `#enable-quic` என்ற ஃபிளாக் தொழில்நுட்பம், இணையதளங்களுடன் இணைப்பை ஏற்படுத்தும் நேரத்தைக் குறைக்கிறது. குறிப்பாக இணைய வேகம் குறைவாக இருக்கும்போது, பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தை இது அதிகரிக்க உதவும்.