ஆன்லைன் தளத்தில் வீடு தேடிய நபரிடம் மோசடி.. ரூ.1.6 லட்சம் பறிப்பு!
பெங்களூருவில் வேலை பார்க்க வரும் வெளிமாநில மென்பொருள் பொறியாளர்களுக்கு தற்போது அங்கு வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது. வீடு கிடைக்கவில்லை என்பதைக் கடந்து தற்போது அதன் பெயரில் மோசடி சம்பவங்களும் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. கொல்கத்தாவைச் சேர்ந்த 25 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது அலுவலகத்திற்குப் பக்கத்தில் நோப்ரோக்கர் (NoBroker) தளத்தில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார். மாராத்தஹள்ளி பகுதியில் 25,000 ரூபாய் வாடகையில் ஒரு வீடு இருப்பதாக அத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்திருக்கிறது. அந்த வீட்டின் உரிமையாளரின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் இவர். 25,000 ரூபாய் வாடகை, இரண்டு மாத வாடகையை முன்பணமாகக் கொடுக்க வேண்டும் என்ற வீட்டு சொந்தக்காரரின் ஒப்பந்ததத்தை இவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆன்லைனில் ஏமாற்று வேலை:
தான் மும்பையில் இருப்பதாகவும், இந்த வாடகை ஒப்பந்தத்தை உறுதிசெய்யும் விதமாக ரூ.4,000-த்தை யுபிஐ மூலம் அனுப்புமாறும் கேட்டிருக்கிறார். நோப்ரோக்கர் தளத்தையும், அந்த உரிமையாளரின் சொல்லையும் நம்பி பணத்தை அனுப்பியிருக்கிறார். தொடர்ந்து இது போல அந்த பொறியாளரிடமிருந்து 1.6 லட்சம் ரூபாயைப் பெற்றிருக்கிறார் வீட்டு உரிமையாளர். ஆனால், பணத்தை அனுப்பிய பின் வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார் அவர். நோப்ரோக்கர் தளமும் இது தங்களுடைய தவறில்லை, வீட்டின் உரிமையாளரிடம் முறையாக விசாரிக்காமல் பணத்தை அனுப்பியது மென்பொறியாளரின் தவறு எனக் கைவிரித்துவிட்டது. ஆன்லைன் மூலம் எந்தவொரு விஷயத்தைக் கண்டறிந்தாலும், அது குறித்து முழுமையாக விசாரிக்காமல் பணத்தை அனுப்பாதீர்கள். பயனர்களாகிய நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.