"கோடிங் பண்ண வேண்டாம்.. ஏஐக்கு சொல்லித்தாங்க!" அட்லான் நிறுவனத்தின் அதிரடி மாற்றத்தால் என்ஜினீயர்கள் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேலையை மாற்றி அமைத்து வரும் வேளையில், தரவு மேலாண்மை நிறுவனமான அட்லான், தனது செயல்பாடுகளில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இணை சிஇஓ புருகல்பா சங்கர், தனது நிறுவனத்தின் என்ஜினீயர்கள் நேரடியாகக் கோடிங் செய்வதைத் தடை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக, ஏஐக்கு எவ்வாறு கோடிங் செய்வது என்பதைக் கற்றுக்கொடுப்பதையே அவர்கள் பணியாகச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த மாற்றமானது என்ஜினீயரிங் துறையுடன் நின்றுவிடாமல், மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
தானியங்கி
தானியங்கி நிறுனமாக மாற முயற்சியா?
பெரும்பாலான நிறுவனங்கள் ஏஐயை உற்பத்தித் திறனை அதிகரிக்க ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால், அட்லான் நிறுவனம் ஏஐயைச் செயல்படுத்தும் கருவியாகவும், மனிதர்களைச் சிந்திக்கவும் கற்பிக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் கூடியவர்களாக மாற்றும் நோக்கில் தானியங்கி நிறுவனமாக உருவெடுக்க முயல்கிறது. "மனிதர்கள் ஏஐக்கு வேலைகளைச் செய்யக் கற்றுக்கொடுப்பதன் மூலம், தாங்கள் இதுவரை செய்யாத புதிய மற்றும் கடினமான பணிகளைச் செய்ய அதிக நேரம் கிடைக்கும்." என்று புருகல்பா சங்கர் தனது லிங்க்டுஇன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
துறைகள்
என்ஜினீயரிங் முதல் மார்க்கெட்டிங் வரை
கோடிங் செய்வதற்கான ஏஐ கருவிகள் தற்போது மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், என்ஜினீயரிங் துறையில் இந்த மாற்றம் மிக வேகமாக நடைமுறைக்கு வந்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே அட்லான் நிறுவனத்தின் என்ஜினீயர்கள் தானியங்கி முறையில் ஏஐயுடன் இணைந்து செயல்படுகின்றனர். இதையே மார்க்கெட்டிங் மற்றும் பிற துறைகளிலும் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குள் மார்க்கெட்டிங் குழுவினரும் நேரடியாகப் பிரச்சாரங்களை நடத்துவதை நிறுத்திவிட்டு, ஏஐயை இயக்கக் கற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று நிறுவனர் அறிவித்துள்ளார்.
சூப்பர்ஹியூமன்கள்
மனிதர்கள் சூப்பர்ஹியூமன்களாக மாற வாய்ப்பு
தகவல்களைச் சீரமைப்பதிலும், அவற்றை ஏஐக்குத் தகுந்தபடி வழங்குவதிலும் மனிதர்கள் ஈடுபடும்போது, அவர்களின் வெளியீடு மற்றும் துல்லியம் பலமடங்கு அதிகரிக்கும் என்று புருகல்பா நம்புகிறார். "மனிதர்கள் சூப்பர்ஹியூமன்களாக மாற வாய்ப்புள்ளது, அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் ஏஐக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்." என்று அவர் கூறுகிறார். ஏஐயை வெறுமனே ஒரு கருவியாகப் பார்க்காமல், ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு மையமாக மாற்றுவதன் மூலம் புதிய சகாப்தத்தை நோக்கி அட்லான் நிறுவனம் நடைபோடுகிறது.