பொறுப்பு இல்லையென்றால் சட்ட நடவடிக்கை! டீப்ஃபேக் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி பேச்சு
செய்தி முன்னோட்டம்
மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதுடெல்லியில் இன்று (பிப்ரவரி 26, 2026) நடைபெற்ற டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் தாங்கள் வெளியிடும் உள்ளடக்கத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, இணையதளங்களில் குழந்தைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்தத் தளங்களின் கடமை என்றும், இதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
அச்சுறுத்தல்
டீப்ஃபேக் மற்றும் ஏஐ அச்சுறுத்தல்கள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகத்தின் அடிப்படை நம்பிக்கையை சிதைப்பதாக அமைச்சர் கவலை தெரிவித்தார். ஒரு நபர் சொல்லாததைச் சொன்னதாகவும், செய்யாததைச் செய்ததாகவும் நம்ப வைக்கும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மிகப்பெரிய ஆபத்து என்று அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட நபரின் அனுமதி இல்லாமல் அவரது முகம், குரல் அல்லது ஆளுமையைப் பயன்படுத்தி ஏஐ உள்ளடக்கங்களை உருவாக்குவதைத் தடுக்க வலுவான சட்டக் கட்டமைப்பு அவசியம் என்றும் அவர் கூறினார்.
நியாயமான வருவாய்
செய்தி நிறுவனங்களுக்கு நியாயமான வருவாய்
டிஜிட்டல் தளங்கள் மற்ற செய்தி நிறுவனங்களின் உழைப்பில் உருவான செய்திகளைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுகின்றன. ஆனால், அந்த வருவாயை செய்திகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் முறையாகப் பகிர்ந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைத்தார். செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு நியாயமான வருவாய் பங்கீட்டை வழங்க வேண்டும் என்றும், இதை நிறுவனங்கள் தாமாக முன்வந்து செய்யாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.
நம்பிக்கை
நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமூகம் குடும்பம், நீதித்துறை மற்றும் ஊடகம் போன்ற பல்வேறு அமைப்புகளின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பரப்பப்படும் போலிச் செய்திகள் மற்றும் திட்டமிடப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் இந்த ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் கேள்விக்குறியாக்குகின்றன. எனவே, டிஜிட்டல் தளங்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், சமூகத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு மதிப்பளித்து அவை செயல்பட வேண்டும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.