அதிக ரேஞ்சை கொண்ட U2 சிப்பை ஐபோன் 15ல் பயன்படுத்தியிருக்கும் ஆப்பிள்
கடந்த செப்டம்பர் 12ம் தேதியின்று தங்களது புதிய ஐபோன் 15 சீரிஸை உலகமெங்கும் வெளியிட்டது ஆப்பிள். அதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 22ம் தேதி இந்தியாவிலும் புதிய ஐபோன் 15 சீரிஸின் விற்பனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இந்தப் புதிய ஐபோன் சீரிஸில் இரண்டாம் தலைமுறை அல்ட்ரா வைடுபேண்டு (U2) சிப்பை பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இந்த சிப்பானது ஆப்பிள் சாதனங்களில் உள்ள 'ஃபைண்டு மை' வசதிக்காகவும், ஆப்பிள் ஏர்டேக்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதியினைக் கொண்டு, நமக்கு அருகில் இருக்கும் நம் நண்பர்களின் ஐபோன்களையோ அல்லது நம்முடைய பிற ஆப்பிள் சாதனங்களையோ கண்டறிய முடியும். இந்த வசதிக்காக முன்னதாக முதல் தலைமுறை அல்ட்ரா வைடுபேண்டு (U1) சிப்பைப் பயன்படுத்தி வந்தது ஆப்பிள்.
அதிக ரேஞ்சு கொண்ட U2 சிப்:
U1 சிப்பானது, 10-15 மீட்டர்கள் வரை மட்டுமே ரேஞ்சு கொண்டிருந்த நிலையில், U2 சிப்பானது 60 மீட்டர் வரையிலான ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. அதாவது, முதல் தலைமுறைய விட மூன்று மடங்கு அதிக ரேஞ்சு. இந்த சிப்பைக் கொண்டு இயங்கும் 'ஃபைண்டு மை' வசதியைப் பயன்படுத்தும் போது, நாம் தேடும் ஐபோன் அல்லது பிற ஆப்பிள் சாதனம் எங்கிருக்கிறது என்பது குறித்து நமது ஐபோனே நமக்கு வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது புதிய ஐபோன்களில் இந்த U2 சிப் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தங்களது ஏர்டேக்குகளிலும் புதிய சிப்பை பயன்படுத்த ஆப்பிள் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.