புதிய ஐபோன் 15 சீரிஸில் பேட்டரியின் அளவை அதிகரிக்கும் ஆப்பிள்
உலகளவில் அதிக ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் ப்ரீமியம் ஸ்மார்போனாக இருந்தாலும், இது வரை குறைவான அளவு கொண்ட பேட்டரிக்களையே தங்களது ஐபோன்களில் கொடுத்து வருகிறது, ஆப்பிள் நிறுவனம். அது அடுத்து புதிதாக வெளியாகவிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போனில் மாறலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், முந்தைய சீரிஸ் ஐபோன்களை விட கொஞ்சம் பெரிய பேட்டரிக்களை, புதிய 15 சீரிஸ் ஐபோன்களில் கொடுக்கவிருக்கிறதாம் ஆப்பிள். ஐபோன் 13 சீரிஸை விட சற்று பெரிய பேட்டரிக்களையே ஐபோன் 14 சீரிஸில் கொடுத்திருந்தது ஆப்பிள். எனினும், அது கவனிக்கத்தக்க மாற்றமாக இல்லாமல் மிகச் சிறிய அளவாகவே இருந்தது. ஆனால், இந்த முறை ஐபோன் பயன்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேட்டரியின் அளவு அதிகரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பேட்டரி அளவை உயர்த்துகிறது ஆப்பிள்?
ஐபோன் 15 சீரிஸின் கீழ் வழக்கம் போல், நான்கு மாடல் ஐபோன்களை வெளியிடவே திட்டமிட்டு வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்களே வெளியிடப்படவிருக்கின்றன. இந்த நான்கு மாடல்களிலும் முந்தைய 14 சீரிஸை விட 400mAh முதல் 600mAh வரை அதிக பேட்டரி அளவை ஐபோன் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குறைந்தபட்சமாக ஐபோன் 15 ப்ரோ மாடலானது 3,650mAh பேட்டரி அளவுடனும், அதிகபட்சமாக ஐபோன் 15 பிளஸ் மாடலானது 4,912mAh பேட்டரி அளவுடனும் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.