சில்லறை விற்பனைக்குத் தயார்; இந்தியாவில் 2 ஆப்பிள் ஸ்டோர்கள் திறப்பு
ஆப்பிள் நிறுவனம், தனது கால் தடத்தை இந்தியாவில் வலுவாக பதிப்பதிற்கு ஆவன செய்கிறது. அதன் ஒரு படியாக ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ் திறக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், இந்தியாவில் வெகு விரைவில் சில்லறை விற்பனைக்கென, பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஆளெடுப்பு பணிகள், துரிதமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆப்பிளின் இணையதளத்தில், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளதாக காட்டுகிறது. ஊடகங்களின் செய்திபடி, இந்த காலி பணியிடங்கள், ஆப்பிள் இந்தியாவில் திறக்கவிருக்கும் தனது ஸ்டோர்களை, குறி வைத்து நிரப்பப்பட்டு வருகிறது. புதிதாக பணிக்கு தேர்ந்தெடுக்க பட்டவர்கள் சிலர், ஏற்கனவே லிங்க்ட்இனில் இந்த செய்தியை கசிய விட்டுள்ளனர், எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையிலும் டெல்லியிலும் வரப்போகிறது ஆப்பிள் ஸ்டோர்ஸ்
2020 -ஆம் ஆண்டே, ஆப்பிள் தனது ஸ்டோர்களை இந்தியாவில் திறக்க திட்டமிட்டது. ஆனால் பெருந்தொற்று காரணமாக, அந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆப்பிள், தனது முதல் ஆப்பிள் ஸ்டோரை மும்பையிலும், அதைத் தொடர்ந்து புதுதில்லியிலும் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முதல் ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் திறக்கப்படலாம் என்றும், இரண்டாவது ஸ்டோர் புது தில்லியில் உள்ள சாகேட்டில் அமைக்கப்படலாம் என்றும் ஊடகங்கள் யூகிக்கின்றன. எனினும், ஆப்பிள் நிறுவனம் தனது சேவையை, நாடு முழுவதும் விரைவில் விரிவுபடுத்துமா என்று அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் ஆப்பிள் தரப்பில் வழங்கப்படவில்லை.