செப்டம்பர் 12ல் வெளியாகிறது புதிய ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
ஆப்பிளின் அடுத்த ஐபோன் சீரிஸான 15 சீரிஸ் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் கடந்த சில மாதங்களாகவே கசிந்து வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் நிகழ்வு ஒன்றை நடத்தவிருப்பதை தற்போது உறுதி செய்திருக்கிறது ஆப்பிள். இந்திய நேரப்படி செப்டம்பர் 15ம் தேதி இரவு 10.30 மணிக்குத் தொடங்குகிறது இந்த ஆப்பிள் நிகழ்வு. இந்தியாவில் இந்த நிகழ்வை ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையில் நம்மால் பார்க்க முடியும். இந்த நிகழ்வில், தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட ஆப்பிள் சாதனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
என்னென்ன தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்?
இந்த செப்டம்பர் மாத நிகழ்வில், ஐபோன் 15 சீரிஸின் கீழ், வழக்கம் போல் ஐபோன் 15, 15 ப்ரோ, 15 ப்ளஸ் மற்றும் 15 மேக்ஸ் ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கிறது ஆப்பிள். இந்த போன்களில் புதிய மேம்படுத்தப்பட்ட A17 பயானிக் சிப்பை ஆப்பிள் பயன்படுத்தியிருப்பதுடன், வழக்கமாகப் தங்கள் சாதனங்களுக்குப் பயன்படுத்தும் லைட்னிங் கேபிளுக்கு மாற்றாக, டைப் சி கேபிளைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் வாட்ச் சீரிஸ் 9, அப்டேட்டட் வாட்ச் அல்ட்ரா மற்றும் M3 ப்ராசஸருடன் கூடிய புதிய சாதனம் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நிகழ்வில் ஐஓஎஸ் 17, ஐபேடுஓஎஸ் 17, வாட்ச்ஓஎஸ் 10 மற்றும் டிவிஓஎஸ் 10 ஆகிய இயங்குதளங்களையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஆப்பிள்.