ஐபோன் 15 சீரீஸில் சூடாகும் பிரச்சினையை சரி செய்யவிருக்கும் ஆப்பிள்
செய்தி முன்னோட்டம்
கடந்த மாதம் அக்டோபர் 12 அன்று தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். ப்ளஸ் மற்றும் ப்ரோ என நான்கு வகையான 15 சீரிஸ் ஐபோன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.
அக்டோபர் 22 அன்று இந்தியாவிலும் இந்தப் புதிய ஐபோன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், புதிய ஐபோன்கள் மிகவும் சூடாவதாக பயனர்கள் பலரும் கடந்த வாரம் புகாரளிக்கத் தொடங்கினார்கள்.
சில சமயங்களில் ஐபோன்கள் மிகவும் அதிகமாக சூடாவதாகவும் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் புகாரளித்து வருகிறார்கள்.
புதிய போனை செட்டப் செய்யும் செயல்முறையினால் ஐபோன் சூடாகலாம் என வடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் தெரிவித்தாலும், சாதாரண பயன்பாட்டின் போதும் கூட புதிய ஐபோன் சூடாவதாக பயனாளர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
ஆப்பிள்
நடவடிக்கை எடுக்கும் ஆப்பிள்:
பொதுவாக இது போன்ற குற்றச் சாட்டுகளுக்கு ஆப்பிள் செவி சாய்ப்பதில்லை. ஆனால், இம்முறை அதிகளவிலான பயனர்கள் இந்தக் குறிப்பிட்ட பிரச்சினை குறித்து புகார் தெரிவித்து வருவதால், அதனைத் தீர்க்க ஆப்பிள் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி, என்ன காரணத்தினால் சூடாகிறது என்று பிரச்சினையை ஆராயந்து அதனைச் சரி செய்யும் வகையில் அடுத்த சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் தீர்வளிக்கத் திட்டமிட்டிருக்கிறது ஆப்பிள்.
பெரும்பாலும், மூன்றாம் தரப்பு செயலிகள் மற்றும் புதிய ஐஓஎஸ் 17 இயங்குதளத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகள் காரணமாக இந்தப் பிரச்சினை எழுந்திருக்கலாம் எனவும், அதனை சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் ஆப்பிள் சரி செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.