ரூ.42 லட்சத்திற்கு ஏலத்திற்கு வந்திருக்கும் ஆப்பிள் ஷூ
ஆப்பிள் நிறுவனம் எந்தப் பொருளை வெளியிட்டாலும் அதற்கு ஒரு தனி மவுசு ஆப்பிள் ரசிகர்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆப்பிள் 2007-ல் முதன் முதலில் வெளியிட்ட முதல் தலைமுறை ஐபோன் ஒன்று, இந்திய மதிப்பில் ரூ.63 லட்சத்திற்கு ஏலம் போனதை மறந்திருக்க மாட்டீர்கள். தங்கள் மின்னணு சாதனங்களைத் துடைப்பதற்கான துணியை, ரூ.1,900-த்திற்கு விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். ஆப்பிள் வாடிக்கையாளர்கள் அதனையும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில், ஆப்பிளின் லோகோ பொறித்த காலணி (Shoe) ஒன்று தற்போது ஏலத்திற்கு வந்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த சாதபீஸ் ஏல நிறுவனத்தின் மூலம் இந்த காலணியானது ஏலம் விடப்பட்டிருக்கிறது.
ஆப்பிள் லோகோ பொறித்த காலணி:
1990-களில் தங்களது ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவே பிரத்தியேகமாக ஆப்பிள் தயாரித்த பொருட்களுள் ஒன்று, தற்போது ஏலம் விடப்பட்டிருக்கும் இந்த காலணி. முழுவதும் வெள்ளை நிறத்தில், அப்போதைய ஆப்பிளின் லோகோவான வானவில் நிற லோகோவைத் தாங்கி நிற்கிறது இந்த ஆப்பிள் காலணி. இந்த காலணியை பொதுப் பயனர்களின் பயன்படுத்தும் வகையில் விற்பனைக்கு அந்நிறுவனம் கொண்டு வரவே இல்லை. இதுவே, இந்தக் காலணியை மிகவும் பிரத்தியேகமாக மாற்றுவதாக ஆப்பிள் ரசிகர்கள் கருதுகிறார்கள். இந்தக் காலணியைத் தற்போது 50,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம்) என்ற தொடக்க விலையில் ஏலத்திற்கு விட்டிருக்கிறது சாதபீஸ். இறுதி ஏல மதிப்பு இதனை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.