சாட்ஜிபிடி-க்கு போட்டியாக மாறும் ஆப்பிள் Siri; Campos AI சாட்பாட் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன், ஐபேட் மற்றும் மேக் சாதனங்களில் உள்ள 'Siri' செயலியை முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு எடுத்து செல்ல தயாராகி வருகிறது. Campos என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய பதிப்பு, வெறும் குரல் கட்டளைகளுக்கு பதிலளிப்பதுடன் நின்றுவிடாமல், மனிதர்களை போலவே உரையாடும் திறன் கொண்ட ஒரு Chatbot-டாக செயல்படும். தற்போதுள்ள Siri போலல்லாமல், புதிய பதிப்பு நீங்கள் கேட்கும் கேள்விகளின் சூழலை(Context) புரிந்து கொண்டு தொடர்ந்து உரையாடும். இது இணையத்தில் தேடுதல் நடத்துவது, கட்டுரைகளை எழுதுவது, படங்களை உருவாக்குவது மற்றும் கோப்புகளை சுருக்குவது போன்ற பணிகளை செய்யும். மேலும், உங்கள் அனுமதியுடன் mail, காலண்டர் மற்றும் புகைப்படங்களை ஆய்வு செய்து, தேவையான தகவல்களை நொடியில் எடுத்துக் கொடுக்கும்.
கூட்டணி
ஆப்பிள் ஜெமினியுடன் தொழில்நுட்ப கூட்டணி
இந்த மாற்றத்திற்காக ஆப்பிள் நிறுவனம், கூகுளின் 'ஜெமினி' (Gemini) குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிளின் சொந்த 'ஏஐ' மாடல்கள் மற்றும் கூகுளின் கிளவுட் சர்வர்கள் உதவியுடன் இந்த 'ஸ்ரீ' இயங்கும். இது ஜூன் மாதம் நடைபெறும் ஆப்பிளின் சர்வதேச மேம்பாட்டாளர் மாநாட்டில் (WWDC) அறிமுகப்படுத்தப்பட்டு, செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள iOS 27 மென்பொருளுடன் பொதுமக்களுக்குக் கிடைக்கும். மற்ற நிறுவனங்களின் சாட்பாட்கள் பயனர்களின் உரையாடல்களை நினைவில் வைத்துக்கொள்ளும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களின் தனியுரிமைக்கு (Privacy) முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தரவு சேகரிப்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.