இந்திய ஐபோன் பயனர்கள் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ஆப்பிள் அதிர்ச்சி தகவல்
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் இந்தியா மற்றும் 91 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளது. இஸ்ரேலில் உள்ள என்எஸ்ஓ குழுமம் தயாரித்த பெகாசஸ் உட்பட,"கூலிப்படை (மெர்சினரி) ஸ்பைவேர்" எனப்படும் ஒரு வகையான ஸ்பைவேர் மூலம் அவர்களின் ஐபோன்கள் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்று அந்நிறுவனம் பயனர்களுக்குத் தெரிவித்தது. மேலும், தெரியாத அனுப்புநர்களின் இணைப்புகளில் கவனமாக இருக்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில், அவர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு இதேபோன்ற எச்சரிக்கைகளை அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த எச்சரிக்கையை அவர்களின் ஐபோன்கள் மீது அரசு ஆதரவுடன் ஸ்பைவேர் தாக்குதல் நடத்தப்படலாம் என்று பரிந்துரைத்தது நினைவிருக்கலாம். இருப்பினும், எந்தவொரு குறிப்பிட்ட தாக்குதலையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆப்பிள் பின்னர் கூறியது.
குறிப்பிட்ட பயனர்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை ஈமெயில்
இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, இந்த எச்சரிக்கைகள் தாக்குதல்களுக்கு குறிப்பிட்ட யாரையும் குறை கூறாமல் வந்துள்ளன. வியாழன் அன்று அதிகாலை 12:30 மணியளவில் இந்த எச்சரிக்கை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. எத்தனை பேருக்கு இந்த ஈமெயில் அனுப்பப்பட்டது என்பது தெரியவில்லை. மின்னஞ்சல்களில் Pegasus ஸ்பைவேரைக் குறிப்பிட்டு, மேலும் இதுபோன்ற கருவிகள் மக்களை குறிவைக்க உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன என குறிப்பிடப்பட்டிருந்ததாக செய்தி தெரிவிக்கிறது. "எச்சரிக்கை: Apple உங்கள் ஐபோனுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட கூலிப்படை ஸ்பைவேர் தாக்குதலைக் கண்டறிந்தது" என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த மின்னஞ்சலில், இந்த தாக்குதல்கள் அரிதானவை, மிகவும் அதிநவீனமானவை, நிறைய பணம் செலவாகும் மற்றும் ஒரு சிலரை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.