எப்போது அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ்? என்னென்ன வசதிகள்?
செப்டம்பர் 13-ம் தேதி தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ல் முன்பதிவும், செப்டம்பர் 22-ம் தேதி அதிகாரப்பூர்வ வெளியீடும் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸில் மிக மெல்லிய பெசல்களையும், கர்வ்டு எட்ஜையும் ஆப்பிள் கொடுத்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், நான்கு மாடல்களிலும் டைனமிக் ஐலாண்டு வசதி கொடுக்கப்படவிருக்கும் நிலையில், லைட்னிங் கேபிளுக்குப் பதிலாக டைப்-சி கேபிள் கொடுக்கப்படவிருக்கிறது. தற்போது வரை வெளியான ஐபோன்களின் ப்ரோ மாடல்களில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இம்முறை வெளியாகவிருக்கும் ப்ரோ மாடல்களில் டைட்டானியம் பாடியைப் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.
ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ்:
ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்பட்ட A16 பயானிக் சிப்பையே, ஐபோன் 15 சீரிஸின் தொடக்கநிலை மாடல்களான ஐபோன் 15 மற்றும் 15 ப்ளஸ் மாடல்களில் ஆப்பிள் பயன்படுத்தவிருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் A17 பயானிக் சிப்பைப் பயன்படுத்தவிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். மேலும், புதிய ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் ஆப்டிகல் ஜூம் வசதிக்காக புதிய பெரிஸ்கோப் லென்ஸ், அதிவேக வயர்லெஸ் கனெக்டிவிட்டிக்காக மேம்பட்ட வைபை 6E வசதி ஆகியவை கொடுக்கப்படவிருக்கின்றன. இத்துடன் ஆல்வேஸ்-ஆன் மற்றும் ப்ரோமோஷன் உள்ளிட்ட டிஸ்பிளே வசதிகள் முன்னர் அனைத்து மாடல்களிலும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், புதிய சீரிஸில் ப்ரோ மாடல்களில் மட்டுமே அந்த வசதிகளைக் கொடுக்கவிருக்கிறது ஆப்பிள்.