ஐபோனில் 'மியூட் பட்டனு'க்குப் பதிலாக 'ஆக்ஷன் பட்டனை'க் கொண்டு வரும் ஆப்பிள்
ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய ஐபோன் மாடலை ஆப்பிள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'ஐபோன் 15' சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆப்பிளின் புதிய சீரிஸ் ஸ்மார்ட்போனின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் கேஸின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. இந்தக் கேஸானது ஆப்பிளின் புதிய 15 சீரிஸ் ஐபோன்களின் டிசைனையும் சற்று வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த கேஸில் கேமரா இருக்கும் பகுதியானது முந்தைய ஆப்பிளின் முந்தைய சீரிஸ் ஐபோன்களில் இருப்பது போல இல்லாமல், கொஞ்சம் தனித்துவமாக இருக்கிறது. எனவே, இந்த 15 சீரிஸில் கேமராவின் ஹார்டுவேரும் சற்றே மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றப்படும் ஐபோன் 'மியூட் பட்டன்':
ஐபோன் பயனர்கள் தங்களது போனை மியூட்/ரிங் செய்வதற்கு போனை ஆன் செய்யாமல் நேரடியாக மாற்றுவதற்கு மியூட் பட்டன் ஒன்று முந்தைய ஐபோன்களில் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை அந்நிறுவனம் வெளியிட்ட முதல் ஐபோனில் இருந்தே பின்பற்றி வருகிறது ஆப்பிள். தற்போது முதல் முறையாக அந்த பட்டனில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது ஆப்பிள். இனி அந்த பட்டனை மியூட் செய்வதற்கு அல்லது ரிங் செய்வதற்கு மட்டும் பயன்படுத்தாமல், பல்வேறு வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் ஆக்ஷன் பட்டனாக கொடுக்கவிருக்கிறது ஆப்பிள். இதனையும், ஆப்பிளின் புதிய பாதுகாப்பு கேஸின் டிசைன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஐபோனின் பேட்டரியே முழுமையாக தீர்ந்து விட்டாலும், இந்த புதிய ஆக்ஷன் பட்டன் மூலமாக சில செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பது தான் ஹைலைட்.