20 முறை மடித்ததற்கே உடைந்த திரை; ஆப்பிள் ஐபோன் டுயோ பயனர்களுக்கு ஷாக்
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டுயோ, சந்தைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே அதன் திரை வலிமை (Durability) குறித்த கடுமையான கேள்விகளை எதிர்கொண்டுள்ளது. அக்டோபர் 23, 2026 அன்று ஆஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்த போன்கள் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்தன. போனை வாங்கிய சில மணி நேரங்களிலேயே அதன் உட்புறத் திரையின் மையப் பகுதியில் உள்ள மடிப்பு கோட்டுக்கு அருகே (Hinge) விரிசல்கள் ஏற்படுவதாக பல பயனர்கள் சமூக வலைத்தளங்களில் புகார் அளித்துள்ளனர்.
திரை உடைந்தது
20 முறைகளுக்கும் குறைவாக மடித்த நிலையிலேயே உடைந்த திரை
ரெடிட் தளத்தில் பதிவிட்ட மிட்நைட் ஸ்லம்ப் என்ற பயனர், தனது புதிய ஐபோன் டுயோ போனை வாங்கிய சுமார் ஆறு மணி நேரத்திற்குள்ளாகவே அதன் திரை சேதமடைந்ததாக விரிவாக பதிவிட்டுள்ளார்.
போனை 20 முறைகளுக்கும் குறைவாகவே திறந்து மூடிய நிலையில், திரையின் மடிப்புப் பகுதியில் ஏதோ ஒன்று நகர்வது போன்ற சத்தத்துடன் திரை இரண்டாகப் பிரிந்து விரிசல் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் ஆப்பிள் ஸ்டோருக்கு சென்று தனது சாதனத்தை உடனடியாக புதிய போனாக மாற்றியுள்ளார்.
தொடர் புகார்கள்
சீனப் பயனர்களின் தொடர் புகார்கள் மற்றும் நிலவும் கவலைகள்
இதேபோன்று சீன ஆன்லைன் சமூக வலைத்தளங்களில் இருந்தும் பல பயனர்கள் ஐபோன் டுயோ போனின் மடிப்புப் பகுதியில் ஒரே மாதிரியான திரை விரிசல்கள் ஏற்பட்டுள்ள படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட ஆய்வகப் பரிசோதனைகளில் இத்தகைய திரை முறிவுப் பிரச்சனைகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், தற்பொழுது பயனர்களின் கைகளில் போன் கிடைத்தவுடன் இப் பிரச்சனை எழுந்துள்ளது.
இது உற்பத்தி சார்ந்த குறிப்பிட்ட போன்களின் பழுதா அல்லது ஐபோன் டுயோ போனின் வடிவமைப்பு குறைபாடா என்பது குறித்துத் தெளிவான விளக்கங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
ஆப்பிள் நடவடிக்கை
ஆப்பிள் நிறுவனத்தின் உடனடி நடவடிக்கை மற்றும் பகுப்பாய்வு
திரை விரிசலால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எவ்விதக் கூடுதல் கட்டணமுமின்றி புதிய சாதனங்களை மாற்றிக் கொடுத்துள்ளது.
மேலும், சேதமடைந்த போன்களின் பாகங்களை சேகரித்துத் தங்களின் முதன்மைப் பொறியியல் குழுவிற்கு விரிவான ஆய்விற்காக ஆப்பிள் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
மடிப்புத் திரைகளின் நெகிழ்வுத்தன்மை மற்றும் ஹிஞ்ச் அமைப்பில் உள்ள சிக்கல்களை சரிசெய்வது குறித்து ஆப்பிள் அதிகாரப்பூர்வமாகப் பரிசீலித்து வருகிறது.
இருப்பினும் இச்சம்பவம் குறித்து நிறுவனம் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ பொது அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.