இனி குறைவான விலையிலேயே ஐபோன்கள் பின்பக்க கண்ணாடி அமைப்பை மாற்றலாம், எப்படி?
ஐபோன் பயனாளர்களின் பெருங்கவலைகளுள் ஒன்று, அது பழுதடைந்தால் சரிசெய்ய ஆகும் செலவு. ஆம், ஆப்பிள் ஐபோன்களை சரி செய்யவது, புதிய ஆப்பிள் சாதனத்தை சற்று கூடுதல் விலையில் வாங்குவதும் ஒன்று தான். முக்கியமாக ஆப்பிளின் பின்பக்க கண்ணாடி அமைப்பு உடைந்தால், அதனை மாற்றுவதற்கு மிக அதிகமாக ஆப்பிள் பயனர்கள் செலவு செய்ய வேண்டியிருந்தது. உதாரணமாக ஐபோன் 13 சீரிஸின் ஃப்ளாக்ஷிப் போனான ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலின் பின்பக்க கண்ணாடி அமைப்பை முழுவதுமாக மாற்ற, இந்தியாவில் ரூ.52,900 செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த நிலையை ஐபோன் 14 வெளியீட்டின் போது மாற்றியது ஆப்பிள். ஆப்பிளின் குறைந்த விலை 14 ரக மாடல்களில் குறைவான விலை கொண்ட பின்பக்க கண்ணாடிகளைப் பயன்படுத்தியிருந்தது அந்நிறுவனம்.
குறைந்த பழுது பார்க்கும் விலை:
குறைவான விலை கொண்ட பின்பக்க கண்ணாடிகளை ஐபோன் 14 மற்றும் 14 ப்ளஸ் மாடல்களில் பயன்படுத்தியதன் பலனாக, அதனைப் பழுது பார்க்கும் செலவும் குறைந்தது. ஐபோன் 14 ப்ளஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை முழுமையாக மாற்ற ரூ.16,900 செலவு செய்தால் போதும். ஆனால், ஐபோன் 14 ப்ரோ மாடலின் பின்பக்க கண்ணாடியை சரிசெய்ய ரூ.59,900 செலவு செய்ய வேண்டியிருந்தது. தற்போது புதிதாக ஆப்பிள் வெளியிட்டிருக்கும் ஐபோன் 15 சீரிஸின் ப்ரோ மாடல்களிலும் பின்பக்கம் குறைந்த விலை கண்ணாடிகளையே பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். எனவே, தற்போது ஐபோன் 15 சீரிஸின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் பின்பக்க கண்ணாடியையும் முழுமையாக மாற்ற ரூ.16,900 செலவு செய்தாலே போதுமானதாகக் குறைந்திருக்கிறது.