'ஸ்கேரி ஃபாஸ்ட்' நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமகப்படுத்திய ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம், கடந்த மாதம் நடைபெற்ற தங்களுடைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற 'ஸ்கேரி ஃபாஸ்ட்' (Scary Fast) நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை வெளியிட்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் தங்களுடைய மேக் மாடல்களுக்கான புதிய M3 சிப்பையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தங்களுடைய M2 சிப்பை வெளியிட்டிருந்த ஆப்பிள், அதனைத் தொடர்ந்து அந்த சிப்களைப் பயன்படுத்திய புதிய மேக்புக் ப்ரோ மாடல்களையும் வெளியிட்டிருந்தது. தற்போது அதே போல புதிய சிப்பைக் கொண்ட மேக்புக் ப்ரோ மற்றும் ஐமேக் மாடல்களை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ஆப்பிளின் புதிய M3 சிப்கள்:
தற்போது M3, M3 ப்ரோ மற்றும் M3 மேக்ஸ் என மூன்று வகையான சிப்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இந்த M3 சிப்களை 3nm கட்டமைப்பில் உருவாக்கியிருக்கிறது அந்நிறுவனம். இந்த M3 சிப்களானது M1 சிப்களை விட 50%-மும், M2 சிப்களை விட 30%-மும் வேகமான செயல்பாட்டைக் கொண்டிருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். 16-கோர் நியூரல் இன்ஜின்கள் வரை கொண்டிருக்கின்றன இந்த M3 சிப்கள். இவற்றில் அடிப்படையான M3 சிப்பானது 8-கோர் CPU, 10-கோர் GPU மற்றும் 24GB வரையிலான மெமரியைக் கொண்டிருக்கிறது. M3 ப்ரோவானது 12-கோர் CPU, 18 கோர் GPU மற்றும் 36GB வரையிலான ரேமையும், M3 மேக்ஸானது 16-கோர் CPU, 40-கோர் GPU மற்றும் 128GB வரையிலான மெமரியைக் கொண்டிருக்கிறது.
புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள்:
புதிய சிப்களோடு, புதிய சிப்களைப் பயன்படுத்திய 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களையும் வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். புதிய M3 ப்ரோ மற்றும் M3 மேக்ஸ் சிப்களைக் கொண்ட மேக்புக் ப்ரோவில், 1080p கேமாரக்கள், ஆறு ஸ்பீக்கர்கள், 22 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் 128GB வரையிலான ரேம் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. M3 ப்ரோ சிப்பைக் கொண்ட 14-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலானது ரூ.2 லட்சம் தொடக்க விலையிலும், M3 மேக்ஸ் சிப்பைக் கொண்ட 14-இன்ச் மாடலானது ரூ.3.2 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படவிருக்கிறது. அதேபோல், 16-இன்ச் M3 ப்ரோ மாடலானது ரூ.2.5 லட்சம் தொடக்க விலையிலும், M3 மேக்ஸ் மாடலானது ரூ.3.5 லட்சம் தொடக்க விலையிலும் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
விலை குறைந்த மேக்புக் ப்ரோ மாடல் மற்றும் புதிய ஐமேக்:
கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த M2 சிப்பைக் கொண்ட 13-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலுக்கு மாற்றாக, அடிப்படையான M3 சிப்பைக் கொண்ட 14-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் ஒன்றையும் இன்றைய நிகழ்வில் வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். 8GB வரையிலான ரேம் தேர்வை மட்டுமே கொண்டிருக்கும் அடிப்படையான M3 சிப் கொண்ட மாடலானது இந்தியாவில் ரூ.1.7 லட்சம் தொடக்க விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. M1 சிப்பைக் கொண்ட ஐமேக் மாடலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட பிறகு, M2 சிப்பைக் கொண்ட ஐமேக் மாடலை ஆப்பிள் அறிமுகப்படுத்தவில்லை. மாறாக, M3 சிப்பைக் கொண்ட ஐமேக் மாடலை நேரடியாக தற்போது வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். இந்தியாவில் ரூ.1.35 லட்சம் தொடக்க விலையில் புதிய ஐமேக்கை விற்பனை செய்யவிருக்கிறது ஆப்பிள்.