செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக செய்தி நிறுவனங்களுடன் கைகோர்க்கும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் கான்டே நாஸ்ட், என்பிசி நியூஸ் மற்றும் ஐஏசி போன்ற முக்கிய செய்திகள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் செய்தித்துறை சார்ந்து செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதற்காக மேற்கண்ட நிறுவனங்களின் கட்டுரைகளை பயன்படுத்திக் கொள்ளவே இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க குறைந்தபட்சம் 50 மில்லியன் டாலர் (ரூ. 417 கோடி) மதிப்புள்ள பல்லாண்டு ஒப்பந்தங்களைப் பற்றி விவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. மைக்ரோசாப்ட், ஓபன்ஏஐ, கூகுள் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்த முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக ஆப்பிள் இந்த முயற்சியை தொடங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தலை காட்டாத ஆப்பிள்
ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு ஆனது, பெரிய தரவுத்தொகுப்புகளில் உள்ள வடிவங்களை அங்கீகரிப்பதன் மூலம் படங்களை உருவாக்க மற்றும் மனிதர்களைப் போல பதிலளிக்க கணினிகளுக்கு உதவுகிறது. இந்த நியூரல் நெட்வொர்க்குகள் பரந்த அளவிலான புகைப்படங்கள் அல்லது டிஜிட்டல் உரைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட், ஓபன்ஏஐ, கூகுள் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே சாட்போட்கள் மற்றும் பிற தயாரிப்புகளை வெளியிட்டு, மக்கள் வேலை செய்யும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தி, பில்லியன் கணக்கான டாலர்களை வருமானம் ஈட்டி வருகின்றன. ஆனால், இது எதிலும் ஆப்பிள் நிறுவனம் தலைகாட்டாமல் இருந்து வந்த நிலையில், தற்போதுதான் மிகத் தாமதமாக களமிறங்குகிறது.