ஏலத்திற்கு வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் அசல் துவக்க ஆவணம்: ₹33 கோடிக்கு மேல் விற்க வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
உலகின் மிகச் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அசல் துவக்க ஒப்பந்தம் 2026ஆம் ஆண்டு ஏலத்தில் விடப்பட உள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் மூன்றாவது பங்குதாரரான ரான் வேன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இந்த மூன்று பக்க ஆவணம், $4 மில்லியன் (சுமார் ₹33 கோடி) வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1976ஆம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி என நிறுவனம் தொடங்கப்பட்டபோது, இந்த ஆவணத்தில் நிறுவனர்கள் மூவரின் கையெழுத்தும் அவர்களின் பங்கு சதவீதமும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 10% பங்குகளை வைத்திருந்த ரான் வேன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டு வாரங்களுக்குள், நிதி அபாயங்களைத் தவிர்ப்பதற்காக நிறுவனத்தை விட்டு விலகினார்.
ஆவணம்
ஆவணத்தை விற்றதற்காக வருத்தம்
ஆப்பிள் ஒரு தொழில்நுட்ப ஜாம்பவானாக வளர்ந்த பிறகும் தான் விலகியதற்கு வருத்தப்படவில்லை என்று வேன் தெரிவித்தாலும், தான் வைத்திருந்த அசல் ஆவணத்தின் நகலை வெறும் $500க்கு விற்றுவிட்டதற்கு வருத்தப்பட்டார். தற்போது, அவரது அசல் பங்கு சுமார் $60 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புடையதாக மாறியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணம், ஜனவரி 23இல் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஏல நிறுவனமான கிறிஸ்டிஸ் மூலம் ஏலம் விடப்படவுள்ளது. "We the People: America at 250" என்ற சிறப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஏலம் நடைபெறும். இதற்கு முன்னதாக, 2023இல், திறக்கப்படாத முதல் தலைமுறை ஐபோன் ஒன்று அதன் அசல் விலையை விட கிட்டத்தட்ட 300 மடங்கு அதிகமாக $190,000க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.