ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் பக்கவாதத்தால் பாதிப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மெக்சிகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகன் தலைநகரின் சாண்டா ஃபே அருகில் நடக்கும் உலக வர்த்தக மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, 73 வயதான வோஸ்னியாக் அங்கு சென்றிருந்தார். வோஸ்னியாக், மெக்சிக்க நேரப்படி மாலை 4:20 மணியளவில், அந்நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தது. வோஸ்னியாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். கடந்த 1976 ஆம் ஆண்டு, ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் இணைந்து வோஸ்னியாக், ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தின் நீண்டகால சிஇஓவாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த 2011 ஆம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.