அதிகம் சூடாகும் ஆப்பிள் 15 சீரிஸ் 'ப்ரோ' மாடல்கள், என்ன செய்யவிருக்கிறது ஆப்பிள்?
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள். கடந்த வாரம் முதல், இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் விற்பனைக்கும் வந்தன புதிய 15 சீரிஸ் ஐபோன்கள். இந்த சீரிஸின் கீழ், 15, 15 ப்ளஸ், 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல் ஐபோன்களை வெளியிட்டது அந்நிறுவனம். தற்போது இதில் ப்ரோ மாடல்களில் மட்டும் புதிய பிரச்சினை எழுந்திருப்பதாக பல்வேறு ஆப்பிள் பயனர்களும் புகார் தெரிவித்து வருகிறார்கள். ப்ரோ மாடல்களில், சிலருக்கு சார்ஜிங்கின் போதும், சிலருக்கு சாதாரண பயன்பாட்டின் போதும், அதிகமாக வெப்பமடைவதாக புகார் தெரிவித்து வருகிறார்கள் ஐபோன் பயனர்கள். பலர் இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டிருக்கிறார்கள்.
ஏன் சூடாகின்றன ஐபோன்கள்?
புதிய ஐபோன் சீரிஸின் ப்ரோ மாடல்களில் மிகவும் பவர்ஃபுல்லான A17 சிப்களை பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இந்த பவர்ஃபுல்லான சிப்களும் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அதிகமாக சூடாவதற்கான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ப்ரோ மாடல்கள் அதிகம் சூடாவதாக பல ஆப்பிள் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வந்தாலும், அனைத்து பயனாளர்களுக்கும் இந்தப் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. இது போன்ற சில பிரச்சினைகளுக்கு ஏற்கனவே, சில் சாஃப்ட்வேர் அப்டேட்கள் மூலம் தீர்வளித்திருக்கிறது ஆப்பிள். ஆனால், புதிய ஐபோன் ப்ரோ மாடல்களின் ஹார்டுவேரினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஆப்பிள் என்ன செய்யவிருக்கிறது என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.