ஆண்ட்ராய்டு vs ஐஓஎஸ், எளிய பயன்பாட்டைக் கொண்ட இயங்குதளம் எது?
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் எளிதான பயன்பாட்டைக் கொண்ட இயங்குதளம் எது என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது க்ரீன் ஸ்மார்ட்போன்ஸ். ஸ்மார்ட்போன்கள் ஒப்பீட்டு சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம், இந்த ஆய்வுக்காக அமெரிக்க ஸ்மார்ட்போன் பயனர்களின் கடைசி 12 மாத கூகுள் தேடல் தரவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஸ்மார்ட்போன் பயனாளர், தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள செயல்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு கூகுளின் உதவியை நாடுகிறார இல்லையா என்பதைப் பொருத்து, அந்த இயங்குதளம் எளிய, பிரச்சனையில்லாத பயன்பாட்டைக் கொண்டிருக்கிறதா இல்லையா என்பது முடிவு செய்யப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, 'ஒரு ஸ்மார்ட்போனில் எப்படி ஸ்கிரீன் ரெக்கார்டு செய்வது?', 'ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி?', உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு பயனாளர் கூகுளின் உதவியைத் தேடுகிறாரா என்பதை வைத்து கணக்கிடப்பட்டிருக்கிறது.
எளிய பயன்பாட்டைக் கொண்ட இயங்குதளம்:
மேற்கூறியது போன்ற 12 வகையான செயல்பாடுகள் ஆய்வுக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், 10 வகையான செயல்பாடுகளில் ஐஓஎஸ் இயங்குதளத்தை விட ஆண்ட்ராய்டு இயங்குதளம் எளிய பயன்பாட்டைக் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'ஸ்கிரீன்ஷாட் எடுப்பது' மற்றும் 'QR கோடை ஸ்கேன் செய்வது' ஆகிய இரண்டு செயல்பாடுகளில் மட்டுமே ஐஓஎஸ் இயங்குதளம் முன்னிலையில் இருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில், ஒரு செயல்பாட்டை எப்படி செய்வது எனத் தெரிந்து கொள்ள, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,26,000 கூகுள் தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவே, ஐஓஎஸ் இயங்குதளத்திற்கு 3,58,000 கூகுள் தேடல்கள் மேற்கொள்ளப்படுவதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இதனடிப்படையில் ஐஓஎஸ் இயங்குதளத்தை விட 58.41% ஆண்ட்ராய்டு இயங்குதளம் எளிய பயன்பாட்டைக் கொண்டிருப்பதாக அந்த ஆய்வறிக்கை குறிப்பிடப்பட்டிருக்கிறது.