ஆந்திராவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகத் தடை விதிக்க திட்டமா?
செய்தி முன்னோட்டம்
ஆந்திர பிரதேசத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டமியற்ற மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. டாவோஸில் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அமைச்சர் நர லோகேஷ் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். "ஒரு குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தாங்கள் சமூக ஊடகங்களில் எத்தகைய உள்ளடக்கங்களைப் பார்க்கிறோம் என்பது குறித்த முழுமையான புரிதல் இருப்பதில்லை. எனவே, அவர்களைப் பாதுகாக்க வலுவான சட்டக் கட்டமைப்பு அவசியமானது," என்று அவர் தெரிவித்தார். கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலியஅரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது. அதே பாணியில் ஆந்திராவிலும் சட்டத்தைக் கொண்டுவர அரசு ஆய்வு செய்து வருகிறது.
வரவேற்பு
நர லோகேஷின் கருத்திற்கு மாநில அமைச்சர்கள் ஆதரவு
முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது, சமூக ஊடகங்கள் மூலம் பெண்கள் மீது நடத்தப்பட்ட கீழ்த்தரமான தாக்குதல்களை சுட்டிக்காட்டிய தெலுங்கு தேசம் கட்சி செய்தித் தொடர்பாளர் தீபக் ரெட்டி, நர லோகேஷின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். நச்சுத்தன்மை வாய்ந்த கருத்துக்கள் மற்றும் வன்முறைப் பதிவுகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அவர் விளக்கமளித்தார். சென்னை உயர் நீதிமன்றமும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் குழந்தைகளுக்கு சமூக ஊடகக் கட்டுப்பாடுகளை கொண்டு வரும் முதல் மாநிலமாக ஆந்திர பிரதேசம் திகழும்.