LOADING...
ஏஐ சேவைகளின் விலை அதிகரிக்கும் அபாயம்! ஜூலை முதல் அமலுக்கு வரும் புதிய AWS கட்டண உயர்வு
அமேசான் ஏஐ கிளவுட் கட்டணங்கள் 20% உயர்வு

ஏஐ சேவைகளின் விலை அதிகரிக்கும் அபாயம்! ஜூலை முதல் அமலுக்கு வரும் புதிய AWS கட்டண உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 28, 2026
04:26 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச அளவில் ஆப்பிள், எக்ஸ்பாக்ஸ் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வரும் சூழலில், தற்பொழுது அமேசான் நிறுவனமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் கிளவுட் பிரிவான அமேசான் வெப் சர்வீசஸ் (AWS), தனது மிக முக்கியமான ஏஐ கிளவுட் சேவைகளின் கட்டணங்களை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நேரடியாக நுகர்வோரைப் பாதிக்காது என்றாலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களை உருவாக்கி வரும் உலகளாவிய நிறுவனங்களின் உள்கட்டமைப்பு செலவை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ஜூலை முதல் அமல்

ஜூலை முதல் அமலுக்கு வரும் புதிய 20 சதவீதக் கட்டண உயர்வு

அமேசான் வெப் சர்வீசஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் பணிகளுக்காக முன்கூட்டியே ஜிபியு திறனை முன்பதிவு செய்யப் பயன்படும் 'EC2 கேபாசிட்டி பிளாக்ஸ் ஃபார் எம்எல்' (EC2 Capacity Blocks for ML) என்ற சேவையின் கட்டணங்கள் வருகிற ஜூலை மாதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளன. ஏற்கனவே நடப்பு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் இந்த சேவைக்கான கட்டணத்தை அமேசான் நிறுவனம் 15 சதவீதம் வரை உயர்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு பெரிய கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தா கட்டணங்கள்

ஏஐ சேவைகள் மற்றும் செயலிகளின் சந்தா கட்டணங்கள் உயரும் அபாயம்

உலகில் உள்ள லட்சக்கணக்கான மென்பொருள் உருவாக்குநர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஏஐ கருவிகள் மற்றும் ஆன்லைன் சேவைகளை இயக்க அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) தளத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். தற்பொழுது அமேசானின் கிளவுட் உள்கட்டமைப்பு செலவுகள் அடுத்தடுத்து அதிகரித்துள்ளதால், அந்தப் கூடுதல் சுமையை பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மீதே சுமத்தத் தொடங்கும். இதன் காரணமாக, வரும் மாதங்களில் பயனர்கள் பயன்படுத்தும் பல்வேறு ஏஐ செயலிகள், மென்பொருள்கள் மற்றும் ஏஐ சந்தா கட்டணங்களின் விலை படிப்படியாக உயரக்கூடும்.

Advertisement

மெமரி சிப் தட்டுப்பாடு

சர்வதேச தொழில்நுட்பத் துறையை அச்சுறுத்தும் மெமரி சிப் தட்டுப்பாடு

அமேசான் நிறுவனத்தின் இந்தத் திடீர் விலை உயர்வு ஒரு தனிப்பட்ட நடவடிக்கை அல்ல. மாறாக இது ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையிலும் தற்பொழுது நிலவி வரும் கடுமையான விலை அழுத்தங்களின் ஒரு பகுதியாகும். ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தங்களது சில தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், எக்ஸ்பாக்ஸ் நிறுவனமும் தங்களது கேமிங் சேவைகளின் விலையை அதிகரித்துள்ளது. உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கும் தற்பொழுது சர்வதேச சந்தையில் மெமரி உள்கட்டமைப்பு செலவுகள் வழக்கத்திற்கு மாறாக மிகக் கடுமையாக உயர்ந்து வருவதைப் பொதுவெளியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

HBM பற்றாக்குறை

ஏஐ உள்கட்டமைப்பை முடக்கும் ஹெச்பிஎம் (HBM) பற்றாக்குறை

இந்தத் தொடர் விலை உயர்வுகளுக்குப் பின்னணியில் 'ஹை-பேண்ட்வித் மெமரி' (High-Bandwidth Memory) என்று அழைக்கப்படும் ஹெச்பிஎம் (HBM) சிப்களின் கடுமையான உலகளாவிய தட்டுப்பாடு தான் முதன்மைக் காரணமாக உள்ளது. இன்றைய ஏஐ பிராசஸர்கள் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் மிக வேகமாக இயங்குவதற்கு இந்த ஹெச்பிஎம் கூறுகள் இன்றியமையாதவை ஆகும். ஆனால், சந்தையில் இவற்றின் விநியோகம் மிகக் குறைவாக உள்ளதால், கிளவுட் நிறுவனங்களால் தங்களது ஏஐ தரவு மையங்களை (Data Centers) எதிர்பார்த்த வேகத்திலோ அல்லது குறைந்த செலவிலோ விரிவுபடுத்த முடியாமல் திணறி வருகின்றன.

முதலீட்டாளர் எதிர்பார்ப்பு

சந்தை நிலவரமும் முதலீட்டாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்பும்

இது குறித்துப் பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், மெமரி சிப்களின் உற்பத்திக்கு என்று ஒரு குறிப்பிட்ட எல்லை இருப்பதால், சந்தையில் ஜிபியுகளின் உற்பத்தியும் தற்பொழுது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்குகிறார்கள். இருப்பினும், ஏஐ கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய தேவை எப்போதும் அதிகமாகவே இருப்பதால், கிளவுட் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது கூடுதல் செலவுகளை வாடிக்கையாளர்கள் மீது எளிதாக மாற்றிவிடும் பலத்தைப் பெற்றுள்ளன. இந்த சூழல் மைக்ரான் (Micron) மற்றும் எஸ்கே ஹைனிக்ஸ் (SK Hynix) போன்ற முன்னணி மெமரி சிப் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தரும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement