11 பேர் பலியான டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பின் பின்னணியில் அல்கொய்தா; ஐநா அதிர்ச்சித் தகவல்
செய்தி முன்னோட்டம்
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டை பகுதியில் 11 பேரை பலிவாங்கிய கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில், பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் இந்தியத் துணைக்கண்டப் பிரிவான ஏக்யூஐஎஸ் (AQIS) இயங்கியுள்ளதாக ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், ஐநா சபை தனது 38வது அறிக்கையில் இந்தத் தகவலை முதன்முறையாக நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளது.
பயங்கரவாதம்
சிறிய ரகசிய செல்கள் மூலம் மீண்டும் பலம்பெறும் பயங்கரவாதம்
முன்னதாக வலிமை குன்றி சிதறிய அமைப்பாகப் பார்க்கப்பட்ட ஏக்யூஐஎஸ், தற்போது மீண்டும் ஒரு ஒருங்கிணைந்த பிராந்திய அமைப்பாக உருவெடுத்து வருவதாக ஐநா சபை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அறிக்கையின்படி, பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பெரிய அமைப்புகளாக செயல்படாமல், சிறிய சிறிய ரகசிய குழுக்கள் மூலம் இயங்கும் புதிய உத்தியை இவர்கள் கையாளுகின்றனர்.
மேலும், சொந்தமாக நிதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொண்டுள்ள இந்த அமைப்பு, வங்காளதேசத்திலும் தனது கரங்களைப் பரப்ப முயன்று வருகிறது.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்தும் பயங்கரவாத அமைப்புகள்
ஐநா அறிக்கையின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, பயங்கரவாத அமைப்புகள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகும்.
பயங்கரவாத அமைப்புகளான ஐஎஸ்ஐஎல்-கே போன்றவை தங்களது தீவிரவாதப் பிரச்சாரங்களை மிக வேகமாக பல மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கும், தாக்குதலுக்கான தகவல்களை சேகரிப்பதற்கும் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றன.
மேலும், ரசாயனம் மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதிலும் இந்த அமைப்புகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாக ஐநா எச்சரித்துள்ளது.
எல்லை மோதல்
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை பதற்றமும் ஐநா தடைகளும்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் அதிகரித்து வரும் மோதல்கள் குறித்தும் இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பிற்குத் தலிபான்கள் ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வரும் நிலையில், எல்லையில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
மேலும், ஐநாவின் பயங்கரவாதத் தடைப் பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் முக்கியமாக அல்-நஸ்ரா ஃப்ரண்ட் அல்லது ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பு தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.