Loading...
12 மீட்டர் கடலடியில் சோழர் கால நகரம்! பூம்புகார் அகழாய்வில் வெளியான திடுக்கிடும் ஆதாரங்கள்
பூம்புகார் அகழாய்வில் திடுக்கிடும் ஆதாரங்கள்

12 மீட்டர் கடலடியில் சோழர் கால நகரம்! பூம்புகார் அகழாய்வில் வெளியான திடுக்கிடும் ஆதாரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2026
03:52 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்தின் கடலடிப் பகுதியில் பல அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பூம்புகார் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில், 12 மீட்டர் ஆழத்தில் இந்த அகழாய்வு நடத்தப்பட்டது. இதில் மேற்கு ஆசியப் பகுதிகளை சேர்ந்த அரிய வகை மண்பாண்டங்கள் மற்றும் டார்பிடோ ஜாடிகளின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்பு பண்டைய தமிழ் மன்னர்களின் சர்வதேச கடல்வழி வணிகத்திற்கு மற்றொரு வலுவான வரலாற்று சான்றாக அமைந்துள்ளது. இத்தகவலை தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

வணிகத் தொடர்பு

மேற்கு ஆசிய நாடுகளுடனான பன்னாட்டு வணிகத் தொடர்பு

கடலடியில் கண்டெடுக்கப்பட்ட டார்பிடோ ஜாடிகள் பன்னாட்டுப் பெருங்கடல் வணிகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சிறப்புமிக்கக் கலன்களாகும்.

இவற்றுடன் உறைகிணறுகளின் பாகங்கள் மற்றும் பல கட்டுமான அமைப்புகளும் கடலடியில் கண்டறியப்பட்டுள்ளன.

இக்கலன்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த மக்கள் வெளிநாடுகளுடன் நேரடிக் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டதை உறுதி செய்வதாக தொல்லியல் துறை ஆலோசகர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

இத்தொல்பொருட்கள் இத்தாலி நாட்டிலுள்ள பன்னாட்டுத் தொல்லியல் வல்லுநர்களின் தீவிர ஆய்விற்காகத் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பல தகவல்கள் இதன் மூலம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இலக்கியங்கள்

பண்டைய தமிழ் இலக்கியங்களுக்குக் கிடைத்த வரலாற்று சான்று

இந்தக் கடலடி அகழாய்வு முடிவுகள் பண்டைய தமிழ் இலக்கியக் குறிப்புகளுக்குப் பெரிய சான்றாக அமைந்துள்ளன.

சங்க இலக்கியங்களான பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள யவனர் வாணிபத் தொடர்புகளை இக்கண்டுபிடிப்புகள் நேரடிச் சான்றாக நின்று மெய்ப்பிக்கின்றன.

பல்வேறு மொழிகள் பேசும் வெளிநாட்டு வணிகர்கள் பூம்புகார் துறைமுக நகரில் தங்கி வணிகம் செய்ததாகப் பட்டினப்பாலை விரிவாகக் குறிப்பிடுகிறது.

தற்போதைய கடலடி அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் அந்த பண்டைய இலக்கியக் கூற்றுகளை முற்றிலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன.

ADVERTISEMENT

ஆய்வு 

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆய்வு

தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

பூம்புகார் துறைமுக நகரத்தின் மொத்த பரப்பளவு மற்றும் காவிரி ஆற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை விரிவாக ஆராய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.

தற்போது வரை மொத்த திட்டத்தில் 10 சதவீதப் பணிகள் மட்டுமே வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

வரும் நாட்களில் நடத்தப்படவுள்ள மேல் கட்ட அகழாய்வுகள் மூலம் மேலும் பல அறியப்படாத வரலாற்று உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT