இந்தியாவில் வந்துவிட்டது ஏர்டெல் மற்றும் ஜியோ-வின் 5ஜி நெட்வொர்க்: விவரங்கள் இதோ
மொபைல் நெட்ஒர்க்கின் அடுத்த பரிணாம வளர்ச்சியான 5G சேவையை, இந்தியாவின் பொது துறை நிறுவனமான பிஸ்என்எல், விரைவில் நாடு முழுவதும் தரமுயர்த்த போவதாக தெரிவித்தது. அதற்கெல்லாம் முன்னோடியாக, தனியார் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ, நாடு முழுவதும் தங்கள் பயனர்களுக்கு 5G நெட்வொர்க்கை ஏற்கனவே அறிமுகப்படுத்தி வருகிறது. இவ்விரு நிறுவங்களும், சென்ற ஆண்டு முதல், சோதனை அடிப்படையில், குறிப்பிட்ட சில நகரங்களுக்கு தங்களது 5G சேவையை வழங்கத் தொடங்கியது. இந்த ஆண்டின் இறுதிக்குள், நாடு முழுவதும் 5G நெட்ஒர்க்கை விரிவு படுத்தப்போவதாக இவ்விரு நிறுவனங்களும் தெரிவித்து இருந்தன. அதன் அடிப்படையில், இப்போது இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும், ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் 5G நெட்வொர்க்கை அனுபவிக்க முடியும்.
ஏர்டெல் மற்றும் ஜியோ-வின் 5ஜி நெட்வொர்க் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஏர்டெல் அல்லது ஜியோவில் இருந்து 5ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்த, உங்கள் சிம் கார்டை மேம்படுத்த வேண்டிய அவசியமில்லை எனக்கூறப்பட்டுள்ளது. உங்களிடம் eSIM இருந்தாலும், ஜியோவின் True 5G மற்றும் Airtel இன் 5G பிளஸ் நெட்வொர்க்கை நீங்கள் பயன்படுத்தலாம். எனினும், சில ஸ்மார்ட்போன்களில், 5G நெட்வொர்க்கை இயக்க, சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்பை நிறுவ வேண்டும் என செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது வரை, இவ்விரு நிறுவனங்களும் 5G பயன்பாட்டிற்கென தனி விலை ஏதும் நிர்ணயிக்க வில்லை. ஆனால், விரைவில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், கட்டணத்தை, 10 சதவீத அளவில் உயர்த்த வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல, பிரத்யேக 5G ரீசார்ஜ் திட்டங்கள் எதுவும் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.