வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்?
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படும் தலைப்பாக இருப்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தான். எதிர்காலமாக பேசப்பட்டு வந்த AI-க்கள் தற்போது நிகழ்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வரும் போது பல்வேறு விதமான வாய்ப்புகளோடு, மக்களின் பயத்தையும் தேர்த்தே எடுத்து வந்திருக்கின்றன புதிய AI தொழில்நுட்பங்கள். உலகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிலர் AI தொழில்நுட்பங்களை தங்களுடைய வசதிக்காக பயன்படுத்தினாலும், பலரோ தங்களுடைய வேலைவாய்ப்புகளை AI பறித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் இருக்கின்றனர். மனிதர்களுக்கு மாற்றாக AI-க்களை பயன்படுத்தலாமா என்ற விவாதமும் தற்போது அதிகளவில் எழுந்திருக்கிறது. உலகின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் AI-யா அல்லது ஊழியர்களா என்பது குறித்து தங்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
அலுவலகத்திலிருந்து வேலை:
2020-ல் கொரோனா காலத்தில் சூழ்நிலை காராணமாக பல நிறுவனங்களும் பணியாளர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு மாறினர். ஊழியர்கள் பலரும் இப்போதும் இந்த முறையை பின்பற்றவே விரும்புகின்றனர். இந்நிலையில், புதிதாக வளர்ந்திருக்கும் இந்த AI தொழில்நுட்பமானது வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் என தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார் உலகளாவிய கணக்கியல் நிறுவனம் ஒன்றின் தலைவர் கெவின் எல்லிஸ். AI-யினால் தங்களது வேலை பறிபோகாமல் இருக்க அதிலிருந்த தங்களை வேறுபடுத்திக் காட்ட, சக ஊழியர்களோடும் மேலதிகாரிகளோடும் முகம் பார்த்து பேசுவதே ஒரே வழி. எனவே, தங்களுடை எதிர்காலம் AI-யினால் பாதிக்கப்படாது என்பதை உறுதிசெய்யவே ஊழியர்கள் பலரும் அலுவலகம் வந்து வேலை பார்க்கத் தொடங்குவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.