பாதுகாப்பு குறைபாடுகள் நிறைந்த AI சாட்பாட்கள்.. சுட்டிக்காட்டிய இஸ்ரேல் நிறுவனம்!
சாட்ஜிபிடி உள்ளிட்ட ஜெனரேட்டிவ் AI சாட்பாட்களை பயன்படுத்துவதன் என்ன விதமான ஆபத்துகள் நேரலாம் என்பது குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறது இஸ்ரேலைச் சேர்ந்த டீம்8 என்ற முதலீட்டு நிறுவனம். AI சாட்பாட்டில் பயனர்கள் அளிக்கும் தகவல்கள் ஹேக்கர்களால் எளிதாக திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்திருக்கும் அந்நிறுவனம். நாம் அளிக்கும் சில தனிப்பட்ட தகவல்களை குறிப்பிட்ட AI நிறுவனங்களே கூட பின்னாளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரித்திருக்கிறது. மைக்ரோசாப்ட், ஆல்ஃபபெட் போன்ற பெருநிறுவனங்கள் இது போன்ற சாட்பாட்களை பெரும்பான்மையான பயனர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன. ஆனால், இவற்றில் நாம் அளிக்கும் தகவல்களை நீக்குவதும் எளிதாக செயல் அல்ல என தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது டீம்8.
பாதுகாப்பு குறைபாடுகள்:
அந்நிறுவனம் குறிப்பிடும் மற்றொரு பாதுகாப்பு குறைபாடு, இந்த AI சாட்பாட்களில் பயனர்கள் அளிக்கும் தகவல்களைக் கொண்டு அவற்றுக்குப் பயிற்சியளிக்கப்படுவதில்லை. அதேபோல் நிகழ்நேரத்தில் பயனர்கள் அளிக்கும் தகவல்களையே தனது தகவல் தளத்தில் சேர்த்து மற்ற பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன் இந்த AI சாட்பாட்களுக்கு இல்லை. ஆனால், இனி வரும் காலங்களிலும் இது இப்படியே இருக்குமா எனத் தெரியாது. அப்படி ஒரு நாள் வரும் போது நாம் அந்த சாட்பாட்டிடம் அளித்த தனிப்பட்ட தகவல்கள், மற்றொரு பயனருக்கான விடையாக கொடுக்கப்படலாம் என எச்சரிக்கிறது. இந்த சாட்பாட்களில் பயனர்கள் அளிக்கும் தகவல்களை அதன் நிறுவங்கள் மூன்றாம் தர நிறுவனங்களுக்கு அளிப்பதையும் ஒரு பாதுகாப்பு குறைபாடாக சுட்டிக்காட்டியிருக்கிறது டீம்8.