ஜனவரி 1ல் விண்ணில் ஏவப்படுகிறது கருந்துளைகளை ஆய்வு செய்ய இஸ்ரோவின் புதிய செயற்கைகோள்
2023-ல் சந்திரன் மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான, சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா L1 திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், 2024-னை புதிய விண்வெளி திட்டத்துடன் தொடங்கவிருக்கிறது இஸ்ரோ. ஆம், 2024-ம் ஆண்டு முதல் நாளான ஜனவரி 1ம் நாளில், இப்பேரண்டத்தின் முக்கியமான பொருட்களுள் ஒன்றான கருந்துளைகளை ஆய்வு செய்வதற்கான செயற்கைகோளான XPoSat-ஐ (X-ray Polarimeter Satellite) விண்ணில் செலுத்தவிருக்கிறது இஸ்ரோ. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, இந்திய நேரப்படி நாளை (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு PSLV-C58 ராக்கெட் மூலமாக இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ.
இந்தப் புதிய திட்டத்தின் நோக்கம் என்ன?
நாளை இஸ்ரோ விண்ணில் செலுத்தவிருக்கும் XPoSat செயற்கைகோளானது POLIX (X-ray Polarimeter) மற்றும் XSPECT (X-ray Spectroscopy) ஆகிய இரண்டு அறிவியல் உபகரங்கணங்களைக் கொண்டிருக்கவிருக்கிறது. இந்த அறிவியல் உபகரணங்களின் உதவியுடன், விண்வெளிப் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சைக் கண்காணித்து அதன் மூலம் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். முக்கியமாக இந்த உபகரணங்களின் உதவியுடன் கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சைக் கண்காணிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். இந்தத் திட்டத்துடன், அமெரிக்காவின் நாசாவிற்குப் பிறகு, கருந்துகளை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் விண்வெளி திட்டத்தை செயல்படுத்தும் நாடாக மாறவிருக்கிறது இந்தியா. மேலும், இந்தத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட XPoSat செயற்கைகோளானது ரூ.250 கோடி மதிப்பில் கட்டமைப்பட்டது குறிப்பிடத்தக்கது.