வாட்ஸ்அப் சேவையில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறதா மெட்டா?
உலகில் அதிகளவிலான பயனாளர்களைக் கொண்டிருந்தாலும், இதுவரை தங்கள் குறுஞ்செய்திப் பகிர்வுத் தளமான வாட்ஸ்அப்பில் விளம்பரங்களை வெளியிடும் திட்டத்தை அமல்படுத்தவில்லை மெட்டா. தற்போது உலகளவில் 2.78 பில்லியன் பயனாளர்களைக் கொண்டிருக்கிறது வாட்ஸ்அப். ஆனால், விரைவில் வாட்ஸ்அப்பிலும் நாம் விளம்பரங்களைக் காண நேரிடலாம். தற்போது வெறும் குறுஞ்செய்திப் பகிர்வுத் தளமாக இருப்பதைக் கடந்து, ஒரு சமூக வலைத்தளமாக வாட்ஸ்அப்பை உருவாக்குவதற்தான பணிகளில் ஈடுபட்டு வருகிறது மெட்டா. வாட்ஸ்அப்பின் அடிப்படைய சேவையான குறுஞ்செய்திப் பகிர்வுப் பக்கத்தில் விளம்பரங்களை வெளியிட மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் வாட்ஸ்அப்பில் தலைவர் வில் கேத்கார்ட், வாட்ஸ்அப்பின் பிற வசதிகள் சேனல்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் பக்கங்களில் விளம்பரங்களை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு சேவைகள்:
தற்போது வணிக நிறுவனங்களுக்கான வாட்ஸ்அப் சேவை மூலமாகவும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் காட்டப்படும் விளம்பரங்களையும், அது தொடர்பான வாட்ஸ்அப் கணக்குகளை இணைத்திருப்பதன் மூலமாகவுமே வருமானம் ஈட்டி வருகிறது மெட்டா. ஒட்டுமொத்தமாக, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான வாட்ஸ்அப் மூலம் ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர்கள் வருவாயை மெட்டா ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வாட்ஸ்அப்பிலும் செயற்கை நுண்ணறிவு வசதிகள் பலவற்ற அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். விரைவில் இந்த செயற்கை நுண்ணறிவு வசதிகளுடன் சேர்த்து விளம்பரங்களும் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.