ரூ.15,446 கோடி மதிப்புடைய அதானியின் 4 குழும பங்குகள் விற்பனை!
ஹிண்டன்பர்க் ஒற்றை அறிக்கையால் அதானி குழுமம் பல கோடி சரிவை சந்தித்து வந்தன. தற்போது அதானி குடும்ப அறக்கட்டளை இன்று அதானி குழுமத்தின் 4 நிறுவனங்களில் ரூ.15,446 கோடி மதிப்பிலான சுமார் 21 கோடி பங்குகளை ஒப்பன் மார்கெட்டில் விற்பனை செய்துள்ளது. இந்த பங்குகளை அமெரிக்காவின் GQG Partners என்னும் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் புதிய கடன் வாங்க முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் அதானி குழுமத்திற்கு 15,446 கோடி நிதி கிடைத்துள்ளது. மேலும், இந்த பங்கு விற்பனை மூலம் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய 4 நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 3-5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
அதானியின் ரூ.15,446 கோடி மதிப்பிலான பங்குகளை அமெரிக்காவின் GQG Partners வாங்கியுள்ளது
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகளை ரூ.1,410.86 என்ற விலையில் GQG Partners சுமார் 5,460 கோடி ரூபாய் முதலீடு செய்து இணையான பங்குகளை வாங்கியுள்ளது. இதேபோன்று, அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவன பங்குகளை ரூ.596.20 என்ற விலையில் 5,282 கோடி ரூபாயும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகளை 668.4 ரூபாய் விலை 1898 கோடி ரூபாய்க்கும், அதானி கிரீன் எனர்ஜி பங்குகளை 504.6 ரூபாய் விலையில் 2806 கோடி ரூபாய்க்கும் GQG Partners வாங்கியுள்ளது. எனவே, இதன் மூலம் இன்று அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 7.86 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.